திரை விமர்சனம்

ரேசர் படவிமர்சனம்

நாயகன் அகில் சந்தோஷூக்கு சிறு வயது முதலே ஏற்பட்ட பைக் ரேஸ் மோகம், பைக் ரேசர் ஆசை வரை போகிறது. ஆனால் குடும்பத்தில் போதிய ஆதரவு இல்லை. அதைத்தாண்டி பைக் ரேசராக நாயகனால் சாதிக்க முடிந்ததா என்பது கதைக்களம்.
நாயகனாக நடித்திருக்கும் அகில் சந்தோஷூக்கு இது அறிமுக படம். ஆனால் அறிமுக நடிகர் போலல்லாமல் யதார்த்த நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். தன் ரேஸ் கனவை தந்தையிடம் சொல்வது, அது கிடைக்காத பட்சத்தில் இயல்பாக தன்னை மாற்றிக் கொள்வது என நடிப்பில் புதிய களம் தொடுகிறார்.
நாயகியாக வரும் லாவண்யா, அழகாகவும் இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். காதலனின் பைக் ஆசை தெரிய வந்த இடத்தில் அவரது ரியாக்ஷன் சூப்பர்ப்.
பைக் மெக்கானிக்காக நடித்திருக்கும் ஆறுபாலா, கதையின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம். ரேஸ் பிரியர்களின் கனவுகளுக்கு இவர் உருவம் கொடுக்கும் இடங்கள் அதியற்புதம்.
நாயகனின் தந்தையாக மூர்த்தியின் நடிப்பில் முரசு கொட்டுகிறார். மகனின் ரேஸ் கனவு தெரிந்து நிறைவேற்ற முன்வரும் இடத்தில் அந்த நடிப்புக்கு கரகோஷமும் பெறுகிறார்.
வில்லனாக அரவிந்த், நாயகனின் பயிற்சியாளராக அனீஷ், நாயகனின் அம்மாவாக பார்வதி, நண்பர்களாக சரத், நிர்மல் மற்றும் சதீஷ் பொருத்தமான கதாபாத்திரங்களில் துலங்குகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரபாகரின் கேமரா பைக் ரேஸ் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறது. பரத்தின் இசையில் பின்னணி இசை ரேசுக்கேற்ற கிரேஸ்.
பைக் ரேஸை மையமாக கொண்ட கதையை கிடைத்த பட்ஜெட்டுக்குள் இயக்கி ரேஸ் பாய்ச்சலில் இயக்குனர் வரிசைக்கு வந்திருக்கிறார், இயக்கிய சாட்ஸ் ரெக்ஸ்.