ஓ மை கோஸ்ட் திரை விமர்சனம்
அனகொண்டபுரத்தில் வசிக்கும் மக்களை ராத்திரியானால் ஒரு பேய் வந்து பயமுறுத்த… அந்த ஊருக்குள் திடீரென்று பிரவேசிக்கும் சாமியாரான மொட்ட ராஜேந்திரன் அந்தப் பேயிடமிருந்து ஊர் மக்களை காப்பாற்ற ஒரு உபாயம் செய்கிறார். அதே ஊரில் ஆவிகளை கட்டிப்போட்டு வசியம் செய்து கொண்டிருக்கிறார், பாலா.
இன்னொரு பக்கம் பலான படங்களுக்காக கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கும் காமெடி சதீஷ் ,அவரது நண்பர் ரமேஷ் திலக்குடன் பட வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சதீஷின் காதலி தர்ஷா குப்தாவை ஒரு ஆவி பிடித்து அனகொண்டபுரம் வரை கொண்டு வருகிறது. அனகொண்டாபுர சாம்ராஜ்யத்தின் ‘ஏக போக’ ராணியாக வாழ்ந்த சன்னி லியோனின் ஆவி தான் தர்ஷா குப்தாவின் உடலில் ஆட்கொண்டிருக்கிறது என்பது தெரிய வர…
காதலிக்குள் புகுந்த ஆவியை வெளியேற்ற, காதலன் சதீஷ் பாழடைந்த அந்த அரண்மனைக்குள் காதலியுடன் உள்ளே போக…ஆவியிடம் இருந்து காதலி மீட்கப்பட்டாரா? என்பது திகில் பிளஸ் காமெடி பின்னணியிலான திரைக்கதை
இரண்டாவது பாதி முழுக்க சன்னி லியோனின் ராஜாங்கம் தான். அவரின் சக்திக்கு ஈடு கொடுக்கும் வீரர்களை தினமும் அவர் தேடி சக்தி இழக்க வைத்துக் கொண்டிருக்க, காமெடி ராஜகுரு யோகிபாபு எப்படி அவரது கொட்டத்தை அடக்குகிறார் என்பதை பிற்பாதி சொல்கிறது.
காமெடி சதீஷ்க்கு இரட்டை வேடம். சதீஷ் தனக்கான தயாரிப்பாளரை எப்படி பாலியல் மருத்துவர் ஜி.பி.முத்துவின் கிளினிக்கில் பிடிக்கிறார் என்பது வரை சிரிப்ஸ்க்கு உத்தரவாதம். யோகிபாபுவும் இரட்டை வேடத்தில் அசத்துகிறார். சதீஷின் நண்பராக வரும் ரமேஷ் திலக்கும் ஆங்காங்கே காமெடியில் பிரித்து மேய்கிறார். பயங்கர வீரராக வந்து சன்னி லியோனிடம் ‘சக்தி’யை இழக்கும் ‘ஷேர் கான்’ ரவி மரியா நடிப்பு சூரன்யா..
சன்னி லியோனிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறோமோ அதையெல்லாம் கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் யுவன். இரண்டு பாடல்களுமே ரசிகர்களுக்கான சன்னி லியோன் ஸ்பெஷல்.
தீபக் மேனனின் ஒளிப்பதிவில் அரண்மனை செட் இன்னும் பிரமாண்டமாக கண்முன் விரிகிறது.
ஆவிக்கதைக்குள் காமெடிப் பந்தை ஒடவிட்டு ஓடிப்பிடித்து விளையாடி இருக்கிறார், இயக்கிய யுவன். கூடவே ஜிலுஜிலுப்பும் போனசாகி இருக்கிறது.