செம்பி திரை விமர்சனம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாட்டி வீராயிக்கு (கோவை சரளா) பேத்தி செம்பியை (நிலா) டாக்டர் ஆக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அந்த கனவை சிதைக்க வருகிறது மூவர் அடங்கிய பணக்கார இளைஞர் கூட்டணி. காட்டில் தனியாக வரும் செம்பியை கசக்கிப் போட…
செம்பிக்கு நடக்கும் கொடூர நிகழ்வு பாட்டி-பேத்தி இருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. அதை வீராயி எப்படி எதிர்கொள்கிறார்? செம்பிக்கு நியாயம் கிடைத்ததா? என்பது மீதிக்கதை.
செம்பியின் பாசமிகு பாட்டியாக தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் உடல் மொழியிலும் மிரட்டியிருக்கிறார் கோவை சரளா. பேத்திக்கு நடந்த கொடுமை கேட்டு விக்கித்து நிற்கும் காட்சியிலும் போலீஸ் அதிகாரியுடன் ஆவேசமாக மோதும்் இடத்திலும் நடிப்பில் ‘ஆச்சி’ தெரிகிறார்.
அம்மாச்சி என்று அழகாக பாட்டியை அழைக்கும் பேத்தி நிலா, தேர்ந்த நடிகர்கள் மத்தியில் நடிப்பில் தனித்து தெரிகிறாள். அந்த சம்பவத்துக்குப் பிறகு பயத்தில் உடல் வெடவெடக்கும் நடிப்பையெல்லாம் இயக்குனர் மட்டுமே கற்றுத் தந்து விட முடியாது. நிலாவுக்கு விருது நிச்சயம். அரசு வழக்கறிஞராக அஸ்வின் அமைதியும் ஆழமுமான நடிப்பில் கவர்கிறார். அவர் சிறுமியிடம் வக்கீல் பீஸ் வாங்கும் இடம் அழகான கவிதை.
தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, கு.ஞானசம்பந்தம் கேரக்டர்களில் பிரகாசிக்கிறார்கள். வில்லன்களாக வருபவர்களில் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து கண்களில் மரண பயம் காட்டும் சூர்யபிரகாஷ் கச்சிதம்.
ஜீவனின் ஒளிப்பதிவில் இயற்கை அழகுக் காட்சிகள் அத்தனை அழகு. பேருந்துக்குள் நடக்கும் அத்தனை காட்சிகளிலும் நம்மையும்் இணைத்துக் கொள்கிறது கேமரா. மலையில் பறந்து வரும் அந்த பஸ் விபத்து ‘ஆ’ச்சரியம்
நிவாஸ் கேபிரசன்னாவின் இசையில் பாடல்கள் அருமை.
பேருந்தை ஒரு பாத்திரமாக மாற்றி அதைக் கதை சொல்ல வைத்து காட்சிகளில் எதிர்பார்ப்பை எற்படுத்துகிறார், இயக்குனர் பிரபு சாலமன்.
போக்சோ சட்டம் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
பணபலம் அரசியல் பின்புலம் படைத்தவர்களை எதிர்த்துக் களமாடும் மிகச்சாமானிய மனிதர்களின் ஒருங்கிணைப்பு பிற்பகுதி படத்தை தாங்கிப் பிடிக்கிறது.
சாமானிய மக்களுக்கான கடைசி புகலிடம் நீதிமன்றங்கள் தான் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கும் இரண்டாம் பாதியை இன்னும் கூட நெகிழ்ச்சியாய் காட்சிப்படுத்தியிருக்கலாம்