தெற்கத்தி வீரன் திரை விமர்சனம்

மீனவ சங்க தலைவரான சாரத், உதவும் குணம் கொண்டவர். அதேநேரம் தவறு கண்டவிடத்து கோபத்தில் பொங்கி விடுவார். இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம். ஒன்று திரண்டாலும் சாரத்தை நெருங்க முடியாததை உணரும் எதிரிகள், ரகசியமாய் திட்டமிட்டு கொலைப்பழி ஒன்றில் அவரை சிக்க வைக்கிறார்கள். அதில் இருந்து சாரத் மீண்டு வந்தாரா? என்பதே இந்த அதிரடி ரணகள தெற்கத்தி வீரன்.
முதல் படத்திலேயே நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்களுடன் அறிமுகமாகியிருக்கும் சாரத், அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறார். முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு இந்த ஆச்சரியம் காட்சிக்கு காட்சி நீடிக்கிறது. நகைச்சுவை மன்னன் சந்திபாபுவின் பேரன் என்ற அடையாளம் இன்னும் அவரை உற்று நோக்க வைக்கிறது.
நாயகியாக வரும் அனகா, பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார். வரும் படங்களில் நடிப்பையும் எதிர்பார்க்கலாம்.
வில்லன்களாக கபீர் துஹான் சிங், அமைச்சராக ஆர்.என்.ஆர்.மனோகர், பவன், ராஜசிம்மன், ஆர்யன் வில்லத்தனத்தை கச்சிதமாக செய்கிறார்கள்.
நாயகனின் அப்பாவாக வேல.ராமமூர்த்தி, அம்மாவாக ரேணுகா, வழக்கறிஞராக உமா பத்மநாபன் பாத்திரம் அறிந்த பிச்சை. நாயகனின் நண்பர்களாக அசோக், பரணி, வினோத் கேரக்டர்களில் பளிச்.
என்.சண்முகசுந்தரத்தின் கேமரா சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் இன்னிசை. குறிப்பாக இசையமைப்பாளர் தேவாவின் குரலில் வரும் ‘கடலம்மா..’ பாடல் அசத்தலம்மா.
இயக்குநர், ஹீரோ, தயாரிப்பாளர் என்ற முன்று பொறுப்புகளையும் முதல் படத்திலேயே இலகுவாக சுமந்தபோதிலும், சுலபமாக கரையேறியிருக்கிறார், சாரத்.
