‘காபி வித் காதல் ‘விமர்சனம்

இன்றைய தலைமுறையின் காதல் எப்படி இருக்கும் என்பதை சுந்தர் சி தனது பாணியில் சொல்லியிருக்கிறார். அதுதான் ‘காபி வித் காதல்’ படம். அதாவது அவரது லவ் டுடே படம் என்று சொல்லலாம்.
சுந்தர் சி யின் தனித்தன்மையே ஏராளமான நட்சத்திரங்களை வைத்து கலகலப்பான ஒரு படம் தருவது தான். அதே பார்முலாவில் தான் இந்தப் படத்தையும் உருவாக்கி இருக்கிறார்.ஏராளமான நட்சத்திரங்களை வைத்து கட்டி மேய்த்து ஒரு படத்தை உருவாக்குவது அவருக்கு மட்டுமே வரும் கைவந்த கலையாகும்.
ஏராளமான நட்சத்திரங்கள் மட்டும் அல்ல இந்தப் படத்தில் ஏராளமான காதல் கதைகள் உள்ளன.
ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், திவ்யதர்ஷினி (டிடி) 4 பேரும் உடன் பிறந்தவர்கள்.இவர்களின் அப்பா பிரதாப் போத்தன்.திவ்யதர்ஷினிக்கு திருமணம் ஆகிவிட்டது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார்.
இதில் ஜெய்யை ஒரு தலையாக அமிர்தா காதலிக்கிறார். பணக்காரப் பெண்ணாக பார்த்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்று ஜெய்க்கு ஆசை. அப்படி,தம்பி ஜெய்க்குப் பார்த்து வைத்திருக்கும் அமெரிக்கப் பெண்ணை அழைத்து வர போகும் ஜீவாவிற்கு அப்பெண் மேல் ஒரு காதல்.தம்பி ஜீவாவிற்குப் பார்த்து வைத்திருக்கும் பெண்ணுக்கும் ஸ்ரீகாந்துக்கும் ஒரு வகையான தொடர்பு.
ஒருவர் காதலை தியாகம் செய்கிறார். ஒருவர் விட்டுக் கொடுக்கிறார். ஒருவர் ஜோடி சேர்வதைத் தடுக்கிறார். இப்படி பல குழப்பங்களும் முடிச்சுகளும் கேள்விகளும் நிறைந்த கதையை உருவாக்கி படமாக்கி இருக்கிறார் சுந்தர் சி.
பொதுவாக சுந்தர் சி படத்தில் கதைகள் எளிமையாக இருக்கும் .சில எளிமையான முடிச்சுகள் வைத்து அவிழ்ப்பார். இதில் கதை சொல்லலில் ரசிகர்களுக்கு குழப்பம் வருகிறது. ஏனென்றால் ஏராளமான ஜோடிகள் உள்ளன.
கதாநாயகியாக வரும் அத்தனை பெண்களும் கவர்ச்சியாக கலகலப்பாக இருக்கிறார்கள். இளைஞர்களைக் கவரும் வகையில் அவர்கள் நடிப்பை விட கவர்ச்சியை அதிகம் காட்டுகிறார்கள்.
யோகி பாபு, கிங்ஸ்லி வெட்டிங் பிளானராக வருகிறார்கள். அவர்கள் அடிக்கும் அசட்டுத்தனமான லூட்டிகள் சிரிப்பூட்டவில்லை.
இளமையைக் காட்டும் நடிகர் நடிகைகள், கலகலப்பான காட்சிகள் , இளமைத்துள்ளலான யுவன் சங்கர் ராஜாவின் இசை, கலர்ஃபுல்லான பின்புலங்கள் கொண்ட ஒளிப்பதிவு என லாஜிக் மறந்து ரசிப்பதற்கு ஏராளம் உள்ளன. கேள்விகள் மட்டும் கேட்காமல் இருந்தால் காபி வித் காதல் நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.
