சினிமா செய்திகள்திரை விமர்சனம்

‘படவெட்டு ‘ விமர்சனம்

மலையாளத்தில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் ‘படவெட்டு ‘. இதில் நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன், ஷினே டாம் சக்கோ, இந்திரன்ஸ், விஜயராகவன், மனோஜ் ஓமன், ரம்யா சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை லிஜூ கிருஷ்ணா எழுதி இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு தீபக் டி மேனன்.இசை கோவிந்த் வசந்தா.

படவெட்டு என்றால் போர் என்று அர்த்தம்.
அண்மையில் வெற்றி பெற்ற காந்தாரா படம், மண்ணுரிமைக்காகப் போராடும் வனப்பகுதி மக்களைப் பற்றிய கதை.

அதே போல இந்தப் படவெட்டு கேரளாவின் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் விவசாய நிலமீட்புப் போராட்டத்தைச் சொல்கிறது.

காந்தாரா ஆன்மீகம் தெய்வ நம்பிக்கை சார்ந்து பேசியது என்றால் இந்தப் படம் சமகால அரசியலைப் பிரதிபலிக்கிறது.

விவசாய மண்ணை அபகரிக்கும் அதிகார வர்க்கத்திற்கும் போராடும் மண்ணின் மைந்தர்களுக்குமான போர்தான் இதன் கதை.

நிவின் பாலி ஒரு தடகள வீரர்.ஒரு காலத்தில் பந்தயங்களில் வெற்றி பெற்று வாகை சூடி வலம் வந்தவர். ஒரு விபத்தின் மூலம் இயங்க முடியாமல் முடங்கி விடுகிறார். அதே போல தன் காதலையும் இழக்கிறார்.

மனதில் வலியைப் புதைத்துக் கொண்டு விரக்தி, வெறுப்பு, சோம்பல் என்று வாழ்ந்து வருகிறார்.

அந்த ஊர் மண்ணை ஆக்கிரமிக்க வரும் அரசியல் அமைப்பினர் முதலில் இவரது வீட்டைப் புதுப்பித்து தருவதாகக் கூறி அப்படியே செய்கிறார்கள்.

அதன் பின்னணியில் உள்ள வஞ்சகத்தை நிவின்பாலி சந்தேகிக்கிறார் .பிறகு அது நிஜமாகிறது.

தனது ஊர் மண் பறிபோவதற்குக தொடக்கமாக தான் ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது என்று அஞ்சுகிறார்.அரசியல்வாதிகளின் அபகரிப்பு வேலைகள் தொடங்குகின்றன அதுவரை பொறுமையாக இருந்த நிவின்பாலி ஆவேசமாகி எதிர்த்து நிற்கிறார் .அவர் எப்படி தன் மக்களுடன் இணைந்து மண்ணை மீட்கிறார் என்பதுதான் கதை.

இது ஒரு நில மீட்பு போராட்டத்தின் பழக்கப்பட்ட கதை போல் தோன்றினாலும் எதார்த்தத்தோடும் சமகால அரசியலைத் தொட்டும் உருவாக்கி இருக்கும் விதத்தில் இயக்குநர் விஜூகிருஷ்ணா முத்திரை பதித்துள்ளார்.

‘நேரம் ‘படத்தில் பார்த்த அந்த இளைஞன் நிவின்பாலியா இவர் என்று நம்ப முடியாத வகையில் நடிப்பில் பல படிகள் முன்னேறி முதிர்ச்சியான நடிப்பைக் காட்டியுள்ளார்.வலிகளைச் சுமந்து கொண்டு சலனமற்று இருக்கும் போதும் வெகுண்டு எழும்போதும் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கதாநாயகியாக நடித்துள்ள அதிதி பாலன் வழக்கமான டெம்ப்ளேட் நாயகியாக இல்லாமல் மென்மையான உணர்வுகளைக் கடத்தி உள்ளார்.

அட்டகாசம் செய்யும் அரசியல்வாதியாக வரும்
மறைந்த நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகனும் அப்பாவைப் போலவே வில்லத்தனத்தில் வீரியம் காட்டி உள்ளார்.

நிவின் பாலியின் அத்தையாக ரம்யா சுரேஷ் வருகிறார்.அவரைப் போலவே தினே டாம் சக்கோ, மனோஜ் ஓமன் போன்றவர்களும் படம் பார்ப்பவர்களின் கவனத்தில் இடம் பிடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்
தீபக் டி மேனன் கேரளத்தின் இயற்கை எழிலைத் தனது கேமராவுக்குள் பதிவு செய்து காட்சிகள் ஆக்கியுள்ளார்.செயற்கை நிறங்களைக் காட்டாமல் இயக்குநரின் பாதையில் பயணம் செய்துள்ளார்.

தமிழில் ஏற்கெனவே வெற்றி வலம் வந்த
கோவிந்த் வசந்தாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையாக ஒலிக்கின்றன.

படம் ஒரு கிராமத்தின் கதையை கண்முன்னே நிறுத்தி அதன் மூலம் நடப்பு அரசியலை, அதன் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

‘படவெட்டு ‘வியாபார சினிமாக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வூட்டும் படம் எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *