திரை விமர்சனம்

காந்தாரா பட விமர்சனம்

மன்னர் ஆட்சி காலத்தில் கிராம மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தை, தற்காலத்து மன்னர்களின் வாரிசுகள் கைப்பற்ற முயற்சிக்க…மறுபக்கம் அந்த இடத்தை மக்களிடம் இருந்து பறிக்க வனத்துறையும் களத்தில் இறங்க… இந்த இருமுனைப் போராட்டத்தில் தங்களது நிலத்தை பாதுகாக்க அங்கு வாழும் மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் அவர்களின் தெய்வ நம்பிக்கையும் இணைய, அதன் பிறகு நடக்கும் அதிரிபுதிரி ஆட்டம் ஆவேச கிளைமாக்ஸ்
மண்ணுக்காக போராடும் மக்கள் குறித்த கதை நிறைய வந்து விட்டது. இந்த படத்தில் அதில் குலதெய்வத்தையும் இணைத்த விதம் நிஜமாகவே புதுசு.
கதை எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. சாமியாடும் குடும்பத்தில் பிறந்தாலும், யாருக்கும் அடங்காதவராக சுற்றிக் கொண்டிருக்கும் அந்த கேரக்டர் படம் முழுக்க எனர்ஜி தருகிறது. அப்பாவித்தனம், ஆக்ரோஷம், காதல், எதிரிகளிடம் ஆவேசம் என அவர் நடிப்பில் அத்தனை இயல்பு. தங்களது இடத்திற்கு பிரச்சினை என்றதும் முதல் ஆளாக அரசாங்கத்தை எதிர்ப்பவர், வில்லனின் சுயரூபம் தெரிந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் இடம் என படம் முழுக்க இவர் நடிப்பு ராஜ்யம் தான். கிளைமாக்ஸ் சாமி ஆடும் காட்சியிலோ ஒட்டு மொத்த ரசிகர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சப்தமி கவுடா, வனத்துறை காவலரான நிலையில் ஊர் மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்கிற இடத்தில் தவிப்பும் துடிப்புமான நிலையை அற்புதமாக நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார்.
வனத்துறை அதிகாரி வேடத்தில் வரும் கிஷோர் இன்னொரு நடிப்பு அற்புதம். ஊர் மக்களை எதிர்கொள்ளும் காட்சியில் என்னாகுமோ ஏதாகுமோ என்ற பயத்தை கடைசி ரசிகன் வரை நடிப்பால் கடத்தி விடுகிறார்.
மன்னரின் வாரிசாக நடித்திருக்கும் அச்சுயுத் குமார், ஆர்ப்பாட்டமில்லாத வில்லத்தனத்தில் சிக்சர் அடிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ்.காஷ்யப்பின் கேமரா வனப்பகுதிக்கு நம்மையும் கூடவே அழைத்து செல்கிறது.
பி.அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. குறிப்பாக நாயகன் சாமி ஆடும் ்காட்சியில் மிரட்டுது இசை.

வனப்பகுதியில் வாழும் மக்களின் நில மீட்பு போராட்ட வாழ்க்கைக்குள் வனஇலாகாவின் கெடுபிடி, அதற்கு நியாயம் கேட்கும் நாயகன் என போகும் கதைக்குள் குலதெய்வத்தையும் இணைத்த விதத்தில் சிறப்பு கிரீடம் பெறுகிறார், இயக்குனர் ரிஷப் ஷெட்டி.