சினிமா செய்திகள்

மஞ்சு வாரியர் – பிரபுதேவா இணைந்து பணியாற்றும் ‘ஆயிஷா’ படப்பாடல்

‘அசுரன்’ பட புகழ் நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ எனும் படத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவாவின் நடனத்தில் தயாராகி இருக்கும் ,‘ கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலின் புதிய லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது.

இந்த பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.

‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடன அசைவில் தயாராகியிருக்கும் இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம்பெற்று நடனமாடியிருப்பதாலும், இந்த படத்தில் இடம்பெற்ற ஆயிஷா ஆயிஷா எனும் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதாலும், இந்த பாடலுக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *