நானே வருவேன் பட விமர்சனம்
இரட்டையர்கள் கதிர்-பிரபு இருவரில் பெரியவன் கெட்டவன். சின்னவன் நல்லவன். பெரியவனால் வீட்டில் தினம் தினம் பிரச்சினைகள். அடித்துப் பார்த்தும் திருந்தாத அவன் ஒருகட்டத்தில் தந்தையை கொல்கிறான். இரட்டையர்கள் ஒன்றாக இருந்தால், ஒரு உயிர் பிரியும் என ஜோதிடர் சொல்ல, சைக்கோ சிறுவனை கோயிலில் விட்டுவிட்டு மற்றொரு மகனோடு செல்கிறார் தாய்.
அந்த சைக்கோ சிறுவன் என்னவானான் என்பது தெரியாமல், 20 ஆண்டுகள் ஒடிப்போக… இளையவன் மனைவி, மகள் என மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். திடுமென பள்ளி மாணவியான மகளின் செயல்பாடுகளில்எதிர்பாராத மாற்றம். ராத்திரியானால் யாரோ ஒருவனுடன்பேசிக்கொண்டிருக்கிறாள். இதனால்மனநல மருத்துவரிடம் தந்தை அழைத்துப் போக…
மருத்துவம் வேலை செய்யாத நிலையில் அது ஆவியின் சேஷ்டை என தெரிய வர… ஆவியின் நோக்கம் ஒரு கொலை. யாரை கொலை செய்யவேண்டும் என்று கேட்டால், பிரபுவின் அண்ணன் கதிர் என்கிறது, ஆவி.
அந்த ஆவி எதற்காக பிரபுவின் அண்ணனை கொல்ல பிரபுவுக்கே உத்தரவிடுகிறது? என்பது அதிரிபுதிரி கிளைமாக்ஸ். இரட்டையர்கள் கதிர்-பிரபுவாக தனுஷ் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். மகளுக்கு எதோ ஆகி விட்டது என்பது தெரிந்தது தொடங்கி தவிப்பும் துடிப்புமான தனுஷ் நம் கண்களில் நீர்க்கோலம் போடுகிறார். மகளுக்கு உணவூட்ட, அவள் மறுக்க, அந்த இடத்தில் பரவும் சோகம் திரை தாண்டி நம்மையும் பாதிக்கிறது. அண்ணன் கதிராக வரும் இ்ன்னொரு தனுஷ், பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த கேரக்டர் அப்படியொரு இளமை எனர்ஜி. கட்டிப்போட்டு வைத்திருந்த மனைவியையும் 2 மகன்களும் தப்பிய நிலையில் அவர்களை கண்டுபிடித்து தண்டிக்கிற அந்த இடம் நிஜமாகவே இதயத்துடிப்பை எகிற வைக்கிற இடம்.
நாயகியாக நடித்திருக்கும் இந்துஜா பாசமுள்ள அம்மாவை கண்முன் நிறுத்துகிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் எல்லி அவரம் வாய் பேசமுடியாத அந்த கேரக்டரில் முகபாவனைகள் மூலம் அழகான நடிப்பை அளவாக வெளிப்படுத்துகிறார். கணவரிடம் உயிருக்காக கெஞ்சும் இடத்தில் அந்த மவுன மொழி தனி ரகம்.
சிறிய குணச்சித்தர வேடமே என்றாலும் மனதில் பதிகிறார், மனநல மருத்துவர் பிரபு. யோகிபாபுக்கு காமெடிக்கு அதிக வாய்ப்பில்லாவிட்டாலும் கிடைத்த இடங்களில் சிரிப்பு சிக்சர் அடிக்கிறார். அப்பா சரவண சுப்பையா, சிறுவர்கள் பிரணவ், பிரபவ் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். ஒரு காட்சியில் செல்வராகவனும் உண்டு.
மொத்தக் கதையையும் சுமக்கிற வேடம் அந்த சின்னப் பெண்ஹியா டேவிக்கு. ஆவியின் தாக்குதலுக்குள்ளான பிறகு நடிப்பில் அவர் கொண்டு வரும் படிப்படியான மாறுதல்கள் அற்புதம். அபரிமிதமான அந்த அப்பா பாசத்திலும் நெகிழ வைக்கிறது சின்னப்பொண்ணு.
அந்த ‘வீரா சூரா’ பாடலில் யுவன் தெரிகிறார். பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரம்.
இயக்கிய செல்வராகவன் ஆவியை கண்ணில் காட்டாமல் புண்ணியம் கட்டிக் கொள்கிறார். கிளைமாக்சில் உயிர் பிழைத்தது கதிரா, பிரபுவா? என்ற கேள்விக்கு சஸ்பென்சையே விடையாக தந்து இரண்டாம் பாகத்துக்கும் வழி வகுத்திருக்கிறரரே, அவர் தான் செல்வா.