விருமன் பட விமர்சனம்
பிரகாஷ் ராஜ் – சரண்யா தம்பதிக்கு நான்கு மகன்கள். மூன்று பிள்ளைகள் அப்பா பேச்சை கேட்க, கடைக்குட்டி கார்த்திக்கு மட்டும் அம்மா என்றால் உயிர். கணவர் பிரகாஷ்ராஜின் முறையற்ற உறவை சரண்யா தட்டிக் கேட்டு பலனில்லாமல் போக, தற்கொலை செய்து கொள்கிறார். அம்மாவின் மரணத்தால் தனது அப்பாவை கார்த்தி எதிரியாக பார்க்க, அப்பா பிரகாஷ ராஜும் கார்த்தியை எதிரியாக பார்க்கிறார்.
மாமா வீட்டில வளர்ந்து வாலிபனான நிலையில் மீண்டும் தனது ஊருக்கு வருகிறார் கார்த்தி. அம்மா ஆசைப்படி தனது அண்ணன்களை அம்மாவின் நினைவிடத்திற்கு அழைத்து வருவதற்காகவும், தனது அப்பாவை நல்வழிப் படுத்துவதற்காகவும் முயற்சி மேற்கொள்ளும் கார்த்தி அதில் வெற்றி பெற்றாரா? என்பதை அடிதடி களத்தில் சொல்வதே இந்த விருமன்.
நாயகன் கார்த்திக்கு கிராமத்து சண்டியர் வேடம் சிறப்பாக பொருந்துகிறது. அப்பாவிடமும அண்ணன்களிடமும் அவமானப்படும் இ்டங்களில் இயல்பான நடிப்பில் கவர்கிறார். நாயகி அதிதியுடனான குறும்பு மிளிரும் காதல் காட்சியில் இளமைக்கொடி பற்க்கிறது. ஆக்ஷன் காட்சியில் அதகளம் ரணகளம். அம்மாவின் நினைவு நாளில் வீடு தேடிவந்து தந்தையை டென்ஷனாக்கும் இடத்திலும் நடிப்பில் கிராமத்து அத்தியாயம்.
அறிமுக நாயகி அதிதி ஷங்கருக்்கு, முதல் படத்திலேயே அழுத்தமான கேரக்டர். கார்த்தியை மிரட்டும் காட்சியில் நடிப்பில் அதிரடி காட்டுபவர், காதல் காட்சிகளை முத்தத்தால் நிறைத்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்துகிறார். நடனத்திலும் பின்னி எடுக்கிறார்.
கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் தன் கதாப்பாத்திரத் திமிரை கண்முன் நிறுத்துகிறார். மகன் அடி வாங்குவதை செல்போனில் பார்தது பரவசப்படும் காட்சியில் அந்த கேரக்டர் மீதான நம் கோபம் தான் இவரின் நடிப்புச் சிறப்பு. கார்த்தியின் மாமாவாக ராஜ்கிரண் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். உள்ளுக்குள் பகை, வெளியில் நட்பு என அந்த கிராமத்து பெரிய மனிதர் கேரக்டரில் ஓ.ஏ.கே.சுந்தர் சிறப்போ சிறப்பு.
சூரி, சிங்கம் புலி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.
வடிவுக்கரசி, கருணாஸ், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.சுந்தர், இளவரசு, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார் கிராமத்து இயல்பு மனிதர்களாக வாழ்ந்து கதைக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் கேமரா கிராமத்து அழகை அள்ளி வர, ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடலில் யுவன் சங்கர்ராஜா தெரிகிறார்.
கிராமத்து முரண்பாடான உறவுகளை கூட்டிச் சேர்த்து மேம்படுத்தும் கதையை அடிதடி கரம் மசாலாவில் தோய்த்து தந்திருக்கிறார், இயக்குனர் முத்தையா. கொம்பனில் மாமா-மருமகன் உறவை சொன்னவர், இதில் அப்பா-மகன் மோதலை கையாண்டிருக்கிறார். அப்பாவை திருத்தும் வேடம் என்பது மட்டுமே மகனின் நோக்கமாக இருக்க, அப்பாவை அடித்து அவமானப்படுத்திய ரவுடி கைக்கு மோதிரம் போடும் மகன் கேரக்டர் அந்த இடத்தில் மட்டும் சறுக்குகிறது. என்றாலும் கார்த்்தி நடிப்பில் இருக்கும் எனர்ஜி படத்தை காப்பாற்றி விடுகிறது.