எமோஜி இணையதள தொடர் விமர்சனம்
ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இணைய தொடர் ‘எமோஜி’. ரமணா ஆர்ட்ஸ் தயாரிப்பில், சென் எஸ்.ரங்கசாமி இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா செளத்ரி நடித்துள்ள இத்தொடர் மொத்தம் 7 பாகங்களை கொண்டது.
காதலா, மகிழ்ச்சியா, கொண்டாட்டமா? ஏமாற்றமா? இப்படியான உணர்வுகள் அனைத்தையும் தற்போதைய காலக்கட்ட இளைஞர்கள் எமோஜிக்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்படி அனைத்து உணர்வுகளையும் காதல் மூலம் கடந்து செல்லும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை கவிதையாய் காட்சிப்படுத்தியிருக்கும் தொடர்.
நாயகன் மஹத் ராகவேந்திராவின் வாழ்வில் காதலி, மனைவி என இரண்டு பெண்கள் அவரோடு இணைந்து அப்புறமாய் பிரிந்து செல்கிறார்கள். அது ஏன்? என்பதை இளமை வாசலில் இருந்தபடி திகட்டத் திகட்ட அள்ளித் தருகிறது இந்த எமோஜி.
நாயகனாக வரும் மஹத் ராகவேந்திரா சோகம், சந்தோஷம் இரண்டுக்கும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன் கொடுப்பதை இனி வரும் படங்களில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மஹத்தின் காதலியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி அழகில் கிறங்கடிக்கிறார். நடிப்பிலும் நாலைந்து படியேறுகிறார்.
மஹத்தின் மனைவியாக தேவிகா சதீஷ் நடிப்பில் அதிக மதிப்பெண் வாங்கி விடுகிறார். அதிலும் அந்த குடிகார நடிப்பு அப்பப்பா…
மஹத்தின் நண்பராக நடித்திருக்கும் வி.ஜே.ஆஷிக் அளவான நடிப்பால் வளம் பெறுகிறார். ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி தங்கள் கேரக்டர்களை நடிப்பால் அழகாக்குகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன் காதல் மற்றும் ஊடல் காட்சிகளை ‘இளமை இதோஇதோ’ என்று படமாக்கிய விதத்தில் தனித்து தெரிகிறார். படம் பார்ப்பவர்களையும் பரவசப்படுத்துகிறது.
சனத் பரத்வாஜ் இசையில் பாடல்கள் இனிமை. எழுதி இயக்கியிருக்கும் சென் எஸ்.ரங்கசாமி திரைக்கதையை ஆழமாகவும், காட்சிகளை அழகாகவும் வடிவமைத்திருப்பதோடு, இயல்பான வசனங்கள் மூலம் பார்வையாளர்களை கதைக்குள் ஈர்த்து விடுகிறார்.