குலுகுலு பட விமர்சனம்

நாடோடியாக வாழும் சந்தானம், யார் எந்தநேரத்தில் எந்த உதவி கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்யக்கூடியவர். இ்ந்த குணத்தால் அவர் பல நேரங்களில் சிக்கலையும் சந்திக்கிறார். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கடத்தப்பட்ட தனது நண்பனை கண்டுபிடிக்க அவரிடம் உதவி கேட்க… அவர்களுக்கு உதவ களத்தில் இறங்கும் சந்தானத்தை மிகப்பெரிய பிரச்சினை பின் தொடர, அதில் இருந்து அவர் மீண்டாரா? கடத்தப்பட்டவரை கண்டு பிடித்தாரா? என்பது கதை.
வாயைத் திறந்தாலே சிரிக்க வைக்கும் சந்தானம் இந்த படத்தில் ஏற்றிருப்பது காமெடிக்கெல்லாம் அப்பாற்பட்ட வேடம். படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் காமெடி செய்தாலும், சந்தானம் எந்தவொரு இடத்திலும் காமெடி செய்யாமல் கடைசிவரை சீரியஸாகவே நடித்திருப்பது நிஜமாகவே அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.
நாயகிகளாக நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதுல்யா சந்த்ரா. நாயகி அடையாளம் தெரியாமல் கதாபாத்திரமாகவே வந்து போவது சிறப்பு.
வில்லனாக ப்ரதீப் ராவத், போலீஸாக தீனா, இலங்கைத் தமிழர்களாக மரியம் ஜார்ஜ் அண்ட்கோ கதையோடு பயணிக்கும் பாத்திரங்களில் பளபளக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் எல்லாமே வசன கவிகளாக ஒலிக்கிறது.
சந்தானத்தை வைத்துக்கொண்டு காமெடி படம் மட்டுமே எடுக்க முடியும் என்ற இமேஜை உடைத்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். அப்படியே பள்ளி மாணவியை கடத்தி வந்து பொதுவெளியில் பாலியல் பலாத்காரம் செய்ய முற்படும் அந்த இரண்டு இளைஞர்கள் சம்பந்தப்பட்ட காட்சியில் ‘மேயாத மான்’ மூலம் கிடைத்த தன் இமேஜையும் உடைத்திருக்கிறார், ரத்னகுமார்.
