சினி நிகழ்வுகள்

‘‘ஒரு நல்ல படத்துக்குத்தான் இதுபோன்ற டிரெய்லர் வரும்’’ மணிபாரதி இயக்கிய பேட்டரி படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டு

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையமைத்த பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் படத்தில் நடித்த நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில் ‘‘இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது PVR நிறுவனம் வெளியிடுகிறார்கள். நான் வெளியிடுவதை விட இப்படம் பெரிய வெளியீடாகத்தான் இருக்கும்.
இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். டிரெய்லரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரெய்லர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்’’ என்றார்.
பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா பேசுகையில், ‘‘ஹீரோ செங்குட்டுவன் புது ஹீரோ மாதிரி இல்லாமல் நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் என்கிற மகா கலைஞனை தமிழ் சினிமா சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அழுவதற்குக் கூட தமிழ் பண்பாடு உண்டு. இப்படத்தில் அவர் அழும் காட்சியில் உருண்டு புரண்டு நடித்திருக்கிறார். நட்பு காரணமாகவே மணிபாரதி இப்படத்திற்கு ஒரு பாடல் எழுத எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
பேட்டரி கண்டு பிடிக்கப்பட்டு 220 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படத்தில் மோனிகா தான் பேட்டரி படத்திற்கு யூனிட். பேட்டரி படம் திரில்லர் மாடல்’’ என்றார்.
இயக்குனர் பன்னீர் செல்வம் பேசும்போது, ‘‘இயக்குனர் மணிபாரதி எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மனிதர். பட வாய்ப்பு இல்லையென்றாலும், பாடல் எழுதுவது, கதை எழுதுவது என்று சதா இயங்கிக் கொண்டே இருப்பார் என்றார்.
நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி பேசும்போது, ‘‘பேட்டரி எனக்கு முதல் தமிழ் படம். முழுவதும் சார்ஜில் இருக்கிறது. இது மேட் இன் சைனா இல்லை. மேட் இன் சென்னை பேட்டரி’’ என்றார்.
வசனகர்த்தா ரவிவர்மன் பச்சையப்பன் பேசும்போது,
எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறோம். இப்படம் 2020 மார்ச் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா காரணமாக இவ்வளவு நாட்கள் தள்ளிப் போய் விட்டது. இப்படத்தில் வரும் சில காட்சிகள் ஒரு படத்தில் வந்திருக்கிறது. ஆனால், அது யதார்த்தமாக நடந்தது தான்’’ என்றார்.
நடிகர் மதன்பாப் பேசும்போது, ‘‘அனைத்து பெரிய இயக்குனர்களின் கதை டிஸ்கஷனிலும் இயக்குனர் மணிபாரதி இருப்பார். திரைப்படத்தைப் பொறுத்தவரையில் சிறிய படம், பெரிய படம் என்று எதுவும் கிடையாது. பாகுபலி பிரமாண்டமாக ஓடியது போல, காக்கா முட்டையும் அமைதியாக வெற்றி பெற்றது. அதேபோல் இப்படமும் வெற்றி பெறும்’’ என்றார்.

நடிகர் சூரி பேசும்போது, ‘‘இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை வரச்சொன்ன லிங்குசாமி சாருக்கு நன்றி. தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர் அவர். மணிபாரதி அண்ணன் என்னை இந்த விழாவுக்காக அழைக்கும்போது ‘நான் இந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகையால் என்ன பேசுவது?’ என்று கேட்டேன். உடனே அவர் படத்தின் கதையை சுருக்கமாக கூறினார். இதுமாதிரியெல்லாம் இப்போது நடக்கிறதா? என்று கேட்டேன். ஆமாம் தம்பி என்றார். அவர் கதை கூறிய விதத்தைக் கேட்டு எனது கை மட்டும் நீளமாக இருந்திருந்தால் அங்கிருந்தே அவரை கட்டியணைத்திருப்பேன். ஒரு உயிருக்கு பிரச்சினை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்சினை என்றால் தவித்து விடுவோம். அந்த மாதிரியான சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் நிற்பான், அல்லது மருத்துவரிடம் நிற்பான். அதுதான் உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் சில மருத்துவ கும்பல், நம்முடைய பதட்டத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம்.
இன்று இருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாய்க்கிறார்கள். அதேபோல், முழு படத்தையும் ஈடுபாட்டோடு பார்ப்பதில்லை. பெரிய இயக்குனர்களின் படங்களை தவறாமல் பார்ப்பவர்கள் புது நடிகர்கள், இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்.
எவ்வளவு வசனங்கள் கொடுத்தாலும் போதாது என்று கூறும் மனிதர் எம்.எஸ்.பாஸ்கர். அதேபோல், அனைவருடைய வசனங்களையும் இவரே பேசிவிடுவார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஸ்டூடியோவிற்கு வரும்போது கண்களில் படுவது, கைகளில் கிடைப்பது என்று எல்லாவற்றையும் எடுத்து வந்து இசையமைக்கும் வல்லமை படைத்தவர். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகை அம்மு அபிராமி பேசுகையில், ‘‘அசுரன் படத்தால் தான் எனக்கு இந்த பட வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால், முதலில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. என்னைப் பாராட்டி பேசிய அனைவருக்கும் மிக்க நன்றி. குலுமனாலியில் புடவை கட்டி நடனமாட வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நனவானது. அனைவரிடமும் அன்பாக, பழக வேண்டும் என்பதை இந்த படத்தின் இயக்குனர்மணிபாரதி சாரிடம் கற்றுக் கொண்டேன். இப்படம் சொல்லப்பட வேண்டிய கதை’’ என்றார்.
இயக்குனர் சரண் பேசுகையில், ‘‘இக்காலகட்டத்தில் திரைப்படத்தை எடுத்து வெளியிடுவது என்பது பெரிய டாஸ்க். உத்வேகத்தோடு வரும் தயாரிப்பாளர்களால் தான் தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது. மணிபாரதி வெயிலில் நின்றாலே போதும் சார்ஜ் ஆகிவிடுவார். ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் என்னுடைய நண்பர். நான் எப்பொழுது படம் இயக்கினாலும், அவரிடம் தான் கூறுவேன். நமக்குள் புகுந்து நாம் எப்படி யோசிப்போமா அதே மாதிரி யோசிப்பவர்கள் கிடைப்பது அரிது. அப்படிப்பட்டவர் தான் மணிபாரதி. படத்தின் நாயகன் செங்குட்டுவன் சோஷியல் மீடியாவில் டிரெண்டாக இருக்கிறார். அம்மு அபிராமி பல இடங்களில் நடிகை சரிதாவை நினைவு படுத்துகிறார். அவரை குட்டி சரிதா என்று கூறலாம்.
எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். ஒரு படத்திலேயே பத்து படத்திற்கான வசனங்களைப் பேசி விடுவார். டப்பிங் வந்தால் அடுத்த டேக் போகாமல் பேசி விடுவார். கன்னட மொழி படமான கேஜிஎஃப் -ஐயும் வரவேற்கிறோம். விக்ரம் படத்தையும் நம்ம படம்ன்னு மார்தட்டி வரவேற்கிறோம். யார் வந்தாலும் அவர்களை ஆதரிக்கிறோம்.
இப்படம் வெற்றி பெற உழைத்த அனைவரையும் வாழ்த்துகிறேன். அதேபோல, குறிப்பிட்ட விழாவிற்கு தான் வெற்றிமாறன் வருவார். இந்த விழாவிற்கு அவர் வந்ததே வெற்றி தான். சித்தார்த் விபின் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார்’’ என்றார்.
நடிகர் நாகேந்திர பிரசாத் பேசுகையில், ‘‘இப்படத்தைப் பற்றி டைரக்டர் கூறும்போது, இது மிகவும் சிறிய படம் என்றார். சிறிய படம், பெரிய படம் என்று சொல்லாதீர்கள். இப்படத்தின் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் நடிக்கிறேன் என்று கூறினேன். கதையை நம்பி எடுத்திருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றியடையும்’’ என்றார்.
டைரக்டர் மோகன் ராஜா பேசுகையில், ‘‘கொரானாவிற்கு பிறகு இது தான் என் முதல் மேடை. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஹைதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவியையை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.
அனுபவம் எப்போதும் தோல்வியடையாது. அதுபோல, இப்படக் குழுவினர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இயக்குனர் மணிபாரதியால் தான் ‘வேலைக்காரன்’ படத்தில் சினேகா கதாபாத்திரம் உருவாகியது. அப்படத்தில் முழுக்க முழுக்க மணிபாரதி எனக்கு உறுதுணையாக இருந்தார்.
இளமை புதுமையைத் தரலாம் ஆனால், அனுபவம் தான் அழுத்தத்தைத் தரும். கொரோனா இன்னும் சவாலாக போய்க் கொண்டிருக்கும் காலத்தில், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். கூட்டமாக வந்து திரையரங்கிற்கு வந்து ஊக்குவிக்க வேண்டும். இப்படத்தையும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள்’’ என்றார்.
கவிஞர் சினேகன் பேசும்போது, ‘‘சினிமாவில் முக்கியமான மூலதனம், காத்திருப்பும், நம்பிக்கையும். அது இயக்குனர் மணிபாரதியிடம் இருக்கிறது. இந்த மாதிரி படங்கள் வெற்றி பெறும் போது தான் சிறிய படங்கள் எடுப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும். இதுபோல நிறைய படங்கள் வரவேண்டும்’’ என்றார்.
நடிகர் மாரிமுத்து பேசும்போது, ‘‘எனக்கும் மணிபாரதிக்கும் 34 வருட நட்பு. என் தம்பி அம்பத்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடன் மணிபாரதியும் வேலை பார்த்தார். அப்போது அவர் பெயர் நாகை பொன்னி. அன்று முதல் இன்றுவரை போராடிக் கொண்டு தான் இருக்கிறார். எனக்குத் தெரிந்து மணிபாரதிக்கு இது நான்காவது படம் என்று நினைக்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’’ என்றார்.
இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது, ‘‘பாலுமகேந்திரா மற்றும் பாலசந்தர் அவர்களின் ரசிகர் மணிபாரதி. இன்றும் அவர்களின் மூன்றாம் பிறை மற்றும் அரங்கேற்றம் படங்களைப் பார்த்து விட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும் நன்றி மறக்காதவர், அன்பானவர். குடும்பத்திற்கு வருமானம் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறோம். என்றாவது ஒருநாள் இயக்குனராகும் போது ஒரே நாளில் வாழ்க்கையே பெரிதாக மாறிவிடும். ஆனால், அதே இயக்குனர் தோல்வியடைந்து விட்டால், உதவி இயக்குனரை விட மிகவும் மோசமான நிலைக்குச் செல்ல நேரிடும். ஆனால், மணிபாரதி துவளாமல் சின்னத்திரை, வார பத்திரிகை என்று ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
மணிபாரதியை நம்பி இப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. சரண் சார் கூறியதுபோல, இப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். செங்குட்டுவனுக்கு இப்படம் வெற்றி படமாக இருக்கும்’’ என்றார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, ‘‘மணிபாரதி சாரைப் பற்றி கூறவேண்டுமானால், நாங்கள் சாலையில் சந்தித்து பேசுவோம், அடிக்கடி போன் செய்து கதை கூறுவார். ஒருநாள் நான் ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களுக்கு சிறந்த கதாபாத்திரம் இருக்கிறது. கண்டிப்பாக அழைக்கிறேன் என்றார். அதன்படி அழைத்தார். நானும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று பணியாற்றியிருக்கிறேன்’’ என்றார்.
இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பேசும்போது, ‘‘மணிபாரதி சாரும், சம்பத் சாரும், பேட்டரி படத்தைப் பற்றி கூறி, வாய்ப்புக் கொடுத்தார்கள். மணிபாரதி சாருடன் பணியாற்றும் போது மிகவும் ஆர்வமாக இருக்கும். இதயப்பூர்வமாக பணியாற்றும் அனுபவம் கிடைக்கும். அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கிறார்’’ என்றார்.
நடிகர் செங்குட்டுவன் பேசும்போது, ‘‘எந்த மேடையாக இருந்தாலும், நான் பேசும் முதல் மனிதர் என் அப்பா தான். என்னை இந்தத் துறையில் வெற்றியாளனாக உருவாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். கொரோனாவிற்கு பிறகு இத்தனை நாள் நாங்கள் இழுத்துப் பிடித்ததற்கு காரணம் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தான்.
இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி என்றார்.
இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது, ‘‘திரைக்கதை, வசனங்களை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்ததில் இருந்தே மணிபாரதி வெற்றி பெறுவார் என்பது தெரிந்து விட்டது. தன்னைப் பற்றிய அவரது சரியான புரிதல் தான் இதற்கு காரணம். ஒரு படத்திற்கு திரைக்கதை தான் முக்கியம். திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது ‘செம, வேற லெவல்’ என்ற வார்த்தைகள் 2 கிட்ஸ்களின் தாரக மந்திரமாக உள்ளது’’ என்றார்.
முத்தாய்ப்பாக படத்தின் இயக்குனர் மணிபாரதி பேசுகையில், “திரைச்சுவை என்னும் பத்திரிகையில் சப் எடிட்டராக பணியாற்றினேன். ரஜினி முதல் அனைத்து திரை நட்சத்திரங்களையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஜெயம் ராஜாவின் ரசிகன் நான். தற்போது அவர் சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கி வருகிறார். தெலுங்குப் பட உலகில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இப்படமும் இருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
பேட்டரி படத்தின் நாயகியாக நடிப்பது தொடர்பாக அம்மு அபிராமியின் அப்பாவிடம் பேசும்போது, அவர் முழுக் கதையையும் கேட்டார். இதனால் அவரிடம் மகளுடன் அலுவலகம் வாருங்கள் என்று கூறினேன். அம்மு அபிராமி பாத்திரத்தைப் பற்றி 10 நிமிடங்கள் கூறினேன். அதன்பிறகு படத்தின் கதையைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவருடைய நடிப்பை டைரக்டர் சரண் நடிகை சரிதாவுடன் ஒப்பிட்டார். நான் நடிகை ரேவதியுடன் ஒப்பிடுகிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் மாதையனுக்கு மிக்க நன்றி. ஏவி.எம்.மின் ‘அன்பே அன்பே’ படத்தை நான் இயக்கியபோது நான் கேட்பதையெல்லாம் கொடுத்தார்கள். ஆனால், நான் தான் சரியாக எடுக்கவில்லை. ஆனால், மாதையன் சார் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தார். படத்தை முடிக்கும் வரை எந்த விதத்திலும் தலையிடவில்லை.
நான் செய்த புண்ணியமோ அல்லது என் அப்பா அம்மா செய்து புண்ணியமோ, இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் சூரி என பலரும் இங்கு வந்திருக்கிறார்கள்.
தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார், சூரி. இந்த வருடத்தில் எத்தனை விருதுகள் வெல்லப் போகிறார் என்று தெரியவில்லை.
படத்தின் நாயகன் செங்குட்டுவன் முதல் படத்திலேயே கூட்டத்தை சேர்த்து விட்டார். நடிப்புடன் தயாரிப்பு பணிகளையும் பார்த்துக் கொண்டார். இப்படத்திற்காக எதை செய்யலாம் என்று யோசனை கேட்டால், எது சிறந்ததோ அதைத்தான் தேர்வு செய்வார். அதுவே எனக்கு இப்படம் சிறப்பாக இயக்குவதற்கு உறுதுணையாக இருந்தது.
வெற்றிமாறனின் விடுதலை படம் வெற்றியடைய வாழ்த்துகள். டைரக்டர் சரண் சார் இப்போது ஒரு படம் இயக்க இருக்கிறார். அப்படமும் நிச்சயம் வெற்றியடையும். பன்னீர் செல்வமும் ‘ஐஸ்வர்ய முருகன்’ என்ற படத்தை இயக்குகி இருக்கிறார். ‘தி வாரியார்’ படத்திற்கு பிறகு அது வெளியாகும்.
பிருந்தா சாரதி பற்றி சொல்ல வேண்டுமானால், ரன் படம் தவிர லிங்குசாமியின் அனைத்து படங்களுக்கும் அவர் தான் வசனகர்த்தா. சாகித்ய அகாடமி விருது வாங்கும் அளவுக்கு தகுதி வாய்ந்த எழுத்தாளர். நானும் வசந்தபாலனும் ஒரே இடத்தில் தான் தங்கியிருந்தோம். இந்த விழாவுக்கு அவரை நான் அழைத்தபோது ‘என்னை விட பெரிய டைரக்டரை விழாவிற்கு கூப்பிட வேண்டியது தானே’ என்றார். ‘வெயிலோ, அங்காடித் தெருவோ அவர்கள் எடுக்கவில்லையே’ என்றேன். உடனே வந்து விட்டார். அநீதி என்று படத்தை இ்பபோது அவர் இயக்கி வருகிறார். வாழ்த்துக்கள். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வியந்து பார்க்கக் கூடிய நடிகர் அதில் எந்த சந்தேகமுமில்லை.
ஒளிப்பதிவாளர், சதுரங்கவேட்டைக்குப் பிறகு 10 படங்கள் முடித்து விட்டார். இப்படத்திற்கு பாராட்டு வந்தால், அதற்கு அவரும் முக்கிய காரணம்.

கலாபவன் மணியை நானும் சரண் சாரும் தான் தமிழுக்குக் கூட்டி வந்தோம். நேரமில்லை என்று கூறியவர் ஜெமினிக்குப் பிறகு தமிழில் அதிக படங்கள் நடித்து, அதிகம் சம்பாதித்தார். இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் கன்னட நடிகர் ராஜ் தீபக் செட்டி இவர் போல வருவார்.

சித்தார்த் விபின் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். மதன்பாப் சார் எனக்காக ஒரு விளம்பர படம் நடித்துக் கொடுத்தார். இங்கு வந்ததற்கு நன்றி.
கலை இயக்குனரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். சினேகன் சாரும் மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்படத்திற்கு சிறுமி கதாபாத்திரத்திற்காக தேடும்போது, கைதி படத்தில் நடித்த மோனிகாவை கேட்டோம். கதை பிடித்தால் தான் நடிப்போம் என்று அவர் அம்மா கூறினார். 1 மணி நேரம் கதை கேட்ட பிறகு ஒப்புக் கொண்டார்கள். படம் பார்த்து விட்டு 1 மணி நேரம் பேசினார். அந்தளவிற்கு அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. மாரிமுத்து என்னுடைய சிறந்த நண்பர்.
நடிகர் சூரி சாருக்கு இரவு 11 மணிக்கு பேசினேன். வளர்ந்து வரும் பெரிய நடிகர் எனக்காக இங்கு வருவதற்கு பெரிய மனசு வேண்டும். நான், எஸ்.ஜே.சூர்யா, மாரிமுத்து நாங்கள் மூவரும் ‘ஆசை’ படத்தில் பணியாற்றினோம். அந்த நட்பை மறக்காமல் எஸ்.ஜே.சூர்யா இப்படத்திற்காக டுவிட் செய்திருக்கிறார். அதேபோல சம்பத் மிக மிக உறுதுணையாக இப்படத்திற்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தார்.
இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் தொடர்பாளர் ஜான்சன் அவர்களுக்கும் நன்றி’’ என்றார்.
விழாவின் இறுதியில், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இசைத்தட்டை வெளியிட்டார்கள்.