வேழம் படவிமர்சனம்
காத்திருந்து பழி வாங்கும் யானைக் கதை. அதனால் யானையின் இன்னொரு பெயரான வேழம் பெயரை படத்துக்கு சூட்டியிருக்கிறார்கள்.
ஊட்டியில் வாழ்ந்து வரும் அசோக் செல்வன்-ஐஸ்வர்யா மேனன் காதலர்கள். ஊட்டியில் மர்மமான முறையில் சிலர் இறக்கிறார்கள். ஒருநாள் அசோக் செல்வனும், ஐஸ்வர்யாவும் பைக்கில் செல்லும் போது, மர்ம நபர்களால் ஐஸ்வர்யா கொல்லப்படுகிறார். காயங்களுடன் உயிர் தப்பிக்கும் அசோக் செல்வன், காதலி ஐஸ்வர்யா மேனனை கொலை செய்த மர்ம நபர்களை தேடி அலைகிறார். மர்ம நபர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், ஆரம்பத்தில் கலகலப்பு, அப்புறமாய் சீரியஸ் முகம் என நடிப்பில் வித்தியாசப்படுகிறார். காதலியின் கொலைக்கு காரணமானவர்களை துப்பறியத் தொடங்கும் இடத்தில் இருந்து நடிப்பிலும் நல்ல வேகம்.
நாயகிகள் ஐஸ்வர்யா மேனன்-ஜனனி இருவரில் அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறவர் முதலாமவர் தான். எழுத்தாளராக வந்து மெல்ல மெல்ல நாயகன் மனதில் இடம் பிடிக்கும் இடத்தில் ஜனனி தன் இருப்பை நிரூபிக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஷியாம்சுந்தர் அறிமுகத்தையும் தாண்டி மனதில் பதிகிறார். இனி இவரை புதிய படங்களில் நாயகனாக பார்த்தாலும் ஆச்சரியமில்லை
திரில்லர் கதையை மையமாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தீப் ஷாம். மெதுவாக நகரும் கதை, நாயகன் துப்பறியத் தொடங்கியதும் வேகம் பிடிக்கிறது. முடிவு வரை அந்த வேகம் நீடிப்பது படத்தின் பலம். கிளைமாக்சில் திருப்பத்துக்கு மேல் ஏற்படும் திருப்பம், சுவாரஸ்யம் தாண்டி திகட்டும் அளவுக்கு போய் விடுகிறது. இருப்பினும் ஐஸ்வர்யா தொடர்பான அந்த ட்விஸ்ட் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
ஜானுசந்தரின் இசையில் பாடல்கள் ரசனை. சக்தி அரவிந்த்தின் கேமராவில் ஊட்டியில் பெய்யும் மழை கூட அத்தனை அழகு.
வேழம், வீரம்.