சினி நிகழ்வுகள்

மாயோனைக் காணச் சென்ற ரசிகர்களை வரவேற்ற கிருஷ்ணர்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தைப் பற்றி திரையுலக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்ததால், பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் பிரம்மாண்டமான கட்அவுட்டிற்கு அருகே சில குழந்தைகள் கிருஷ்ணனின் வேடம் தரித்து, வருகை தந்த ரசிகர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

இது தொடர்பாக இப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் சிலர் பேசுகையில், “இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்தில் திரையிடப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படத்தைக் கண்டு ரசிக்க எங்கள் குடும்பத்துடன் வருகை தந்தோம். இங்கு வந்தபிறகு இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் கட்அவுட்டிற்கு சிலர் பாலாபிஷேகம் செய்ததைப் பார்த்தோம். சில குழந்தைகள் கிருஷ்ணன் வேடமணிந்து கையில் புல்லாங்குழலுடன் அழகாக வரவேற்பு அளித்தனர். மறுபுறம் அன்னதானமும் நடைபெற்றது- இதன் காரணத்தை அறிந்து கொள்வதற்காக அங்குள்ளவர்களுடன் பேசினோம். அப்போது தான் எங்களுக்கு அன்று கிருஷ்ண பகவான் அவதரித்த நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திர தினம் என்றும், அதனால் இந்த ரோஹிணி திரையரங்கத்தில் உள்ள கிருஷ்ண பகவானின் கட்அவுட்டிற்கு இது போன்று உற்சாகமான விழா நடைபெறுகிறது என்றும் அறிந்து கொண்டோம். ‘மாயோன்’ திரைப்படத்தைக் காண வந்த எங்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது’’ என்றனர்.
பொதுவாக ‘அம்மன்’ படங்களுக்குத்தான் படக்குழுவினர் பிரம்மாண்டமான அளவில் அம்மனின் சிலைகளை வைத்து, ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்வார்கள். ஆனால் கிருஷ்ண பகவானைப் பற்றிய படத்திற்கு சிறார்கள் கிருஷ்ண வேடமணிந்து வரவேற்பு அளித்ததும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *