சினி நிகழ்வுகள்

மாயோன் பட விமர்சனம்

‘வாழ்க்கையை வாழ இரண்டு விதங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று, உலகில் எதுவுமே அதிசயமில்லை. மற்றொன்று, அனைத்துமே அதிசயம்’ என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மேற்கோளில் தொடங்கி, அதிலேயே முடிகிற கதை மாயோன். புராதன கோயில் ஒன்றில் புதையல் இருப்பதை ஓலைச்சுவடிகள் மூலம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கண்டறிகிறார். ஏற்கெனவே சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் அவர், புதையலை கொள்ளையடித்து வாழ்வில் செட்டிலாகி விட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். அவரது திட்டத்தில் நாயகன் சிபிராஜும் இணைந்து விட புதையலை கண்டறிந்தார்களா? கடத்தினார்களா? என்பது பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை.
தொல்லியல் துறை பணியில் நிபுணத்துவம் வாய்ந்த சிபி சத்யராஜ், ஆரம்பத்தில் கடத்தல்காரர்களுக்கு துணை போகும் வேடத்தில் வருகிறார். அப்புறமே இவர் வில்ல ஹீரோ இல்லை. நல்ல ஹீரோ என்ற தெரிய வருகிறது. கோயிலுக்குள் நள்ளிரவுக்குப் பிறகு இவர் தனது தொல்லியல் சகாக்களுடன் புதையலை தேடி பயணப்படும் இடங்கள் ‘திக் திக்’ திகில் ரகம்.
நாயகி தான்யா ரவிச்சந்திரன் நாயகனுக்கு உதவியாளராக வருகிறார். காதலை சொல்ல முயலும் இடத்தில் முகபாவனைகளில் வசீகரிக்கிறார்.
லோக்கல் வில்லனாக ஹரிஷ் பெராடியும் பாரின் வில்லனாக ஆராஷ் ஷாவும் அட்டகாசப்படுத்துகிறார்கள். தொல்லியல் ஆய்வுத்துறை தலைவராக கே.எஸ்.ரவிகுமார், கோவில் தர்மகர்த்தா ராதாரவி, மந்திரி மாரிமுத்து தங்கள் கேரக்டர்களில் இயல்பு காட்டுகிறார்கள்.
திரைக்கதை எழுதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராகவும் கவனம் ஈர்க்கிறார், தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.
ஆன்மீகத்தையும் அறிவியலையும் கலந்து அமைக்கப்பட்ட திரைக்கதைக்கு அழகு வடிவம் கொடுத்திருக்கிறது, என்.கிஷோரின் இயக்கம். கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம்.
இளையராஜா இசையில் பாடல்கள் சுகராகம். இரவு நேர கோவில் காட்சிகளில் அழகை அள்ளித் தெளிக்கிறது ராம்பிரசாத்தின் கேமரா.
மனதை மயக்கும் ‘மாயோன்.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *