மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் முடித்த ஜி.வி. பிரகாஷூக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம்.. அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், பலன் என்னவோ பூஜ்யம் தான்.
இதே சமயத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் ஒரு வட மாநிலக் கும்பல கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை நாமக்கலில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட…அதனை எடுப்பதற்காக ஒரு குழந்தையை ஆழ்துளை கிணற்றில் போட்டு விடுகிறது, கொள்ளைக் கும்பல்.
குழந்தையைக் கிணற்றில் இருந்து மீட்க புதிய இயந்திரம் ஒன்றை கண்டு பிடிக்கும் ஜி.வி.பிரகாஷ், அதைக்கொண்டு குழியில் விழுந்த குழந்தையை மீட்க முயல, இதை கொஞ்சமும் எதிர்பாராத கொள்ளைக் கும்பல் அந்த முயற்சியை வெறிகொண்டு தடுக்கப் பார்க்க…

தடைகளைத் தாண்டி தனது புதிய கண்டுபிடிப்பு மூலம் ஜி.வி.பிரகாஷ் குழந்தையை காப்பாற்றினாரா? கொள்கைக்காரர்கள் தண்டிக்கப்பட்டார்களா? என்பது பரபர கிளைமாக்ஸ்.
இளம் விஞ்ஞானி கேரக்டருக்கு ஜி.வி.பிரசாத் பொருத்தமாக இருக்கிறார். தனது கண்டுபிடிப்பு அதற்குரிய அதிகாரிகளால் புறம் தள்ளப்படும் நேரங்களில் காட்டும் எக்ஸ்பிரஷன்களில் தேர்ந்த நடிகராக வெளிப்படுகிறார். கிளைமாக்சில் குழந்தையை காப்பாற்ற போராடும் இவரது போராட்டங்கள் உணர்வுக் களஞ்சியம்.
வட நாட்டு கொள்ளையனாக சித்தார்த். தோற்றத்திலும், பார்வையிலுமே தேர்ந்த வில்லனாக பயமுறுத்துகிறார். ஜி.வி.பிரகாஷின் ‘போலீஸ் அப்பா’வாக ஆடுகளம் நரேன், நண்பனாக காளி வெங்கட் நிறைவு. லஞ்சப் போலீசாக ஹரீஷ் பெராடி சிறப்பு.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பின்னணி முன்னணி. ஆழ்துளை கிணறு சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் நெஞ்சில் பாரம் ஏற்றுகிறது.
ஈட்டி வெற்றிப் படம் மூலம் வெற்றிவாகை சூடிய ரவிஅரசுவின் அடுத்த இயக்கம் இந்த படம். எடுத்துக் கொண்ட கதையை நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தி ரசிகனை வசப்படுத்தி, இம்முறையும் இயக்குனர் வீசிய ‘ஈட்டி’ குறிதவறாமல் பாய்ந்திருக்கிறது.

ஐங்கரன் அசத்தலானவன்.