ஆர்ஆர்ஆர் பட விமர்சனம்

பாகுபலி படங்கள் மூலம் மொத்த இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ராஜமவுலியின் அடுத்த பிரமாண்டம். தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் கதாபாத்திரங்கள் வாழ்ந்த 1920 காலகட்டத்துக்கு நம்மையும் அழைத்துச் செல்கிற உயிரும் உணர்வுமான திரைக்கதை படத்தின் மிகப்பெரும் பலம்.
சுதந்திரத்திற்கு முன் விசாகப்பட்டினம் பகுதியில் வாழும் பழங்குடியின சிறுமியை வெள்ளைக்கார கவர்னரின் மனைவி டெல்லிக்கு அடிமையாக அழைத்துச் சென்று விடுகிறார். சிறுமியைக் காப்பாற்றி மீட்டு வர பழங்குடியின மக்களின் காப்பாளானான ஜூனியர் என்.டி.ஆர். டெல்லிக்குக் கூட்டாளிகளோடு போகிறார். இந்த விஷயம் டெல்லியில் உள்ள கவர்னருக்கு தெரிய வர, ஜூனியர் என்.டி.ஆரை பிடித்துத் தரும் போலீஸ் அதிகாரிக்குச் சிறப்பு அதிகாரியாகப் பதவி உயர்வு என அறிவிக்கிறார்.
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் போலீஸ் அதிகாரியான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை பிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்க… பதவி உயர்வு கிடைக்கிறது. பிடிபட்ட ஜூனியர் என்.டி.ஆரை தூக்கிலிட அரசாங்கம் உத்தரவிடுகிறது. அதை நிறைவேற்றும் நேரத்தில் அதே ராம்சரண் ஜூனியரை காப்பாற்றுகிறார். அவர் எப்படி மனம் மாறினார்? கடத்தி சென்ற பழங்குடியின சிறுமி மீட்கப்பட்டாரா என்பது பிரமிப்பும் பிரமாண்டமும் இணைந்த கிளைமாக்ஸ்.
கதையாக சொன்னால் சாதாரணமாகத்் தோன்றும். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதத்தில்தான் ராஜமவுலியின் மேஜிக் படம் நெடுக பரவசமூட்டுகிறது.
படத்திற்கு மிகப்பெரிய பலம் இமைக்கவும் விடாமல் ரசிக்க வைத்த சண்டைக் காட்சிகள். தேடிப்பிடித்த அபூர்வ லொகேஷன்கள். ஸ்டண்ட் மாஸ்டர்கள் சாலமன்-நிக் பவல், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், கலை இயக்குநர் சாபு சிரில், விஷுவல் எபெக்ட்ஸ் சீனிவாஸ் மோகன் ஆகியோர் இயக்குநர் ராஜமவுலி உடன் கைகோர்த்து நிகழ்த்திய சாகசங்கள் நிச்சயமாய் இந்திய சினிமாவின் அடுத்த கட்டம்.
ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரணும், சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார்கள். நடனக்காட்சியில் அசத்துகிறார்கள். நடிப்பிலும் சரிசமமாக ஸ்கோர் செய்கிறார்கள். பாம்புக்கடிக்கு சிகிச்சை கொடுத்து விட்டு தான் வந்த நோக்கத்தை சொல்லும் இடத்தில் ஜூனியர் நடிப்பில் சீனியர் என்பதை நிரூபிக்கிறார். தூக்குக்கயிறு கழுத்துக்கு வந்த நிலையில் ஜூனியரை காப்பாற்றும் இடத்தில் ராம்சரண் நடிப்பில் ஸ்ட்ராங் சரண்.
வெள்ளைக்கார கவர்னர் ஜெனரலாக ரே ஸ்டீவன்சன், அவரது மனைவியாக அலிசன் டூடி பொருத்்தமான தேர்வு. என்.டி.ஆரின் காதலியாக நடித்திருக்கும் ஒலிவியா மோரிஸ் ஜூனியரை இன்னார் என தெரிந்து மிரட்சி காட்டும் இடத்தில் சிறப்பு.
நாயகியாக வரும் ஆலியா பட்டுக்கு அதிக வேலையில்லை. முக்கிய கதாபாத்திரங்களில் வரும் அஜய் தேவகன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோருக்கு படத்தில் அதிக வேலை இல்லை என்றாலும் வந்தவரை நிறைவு.
கிட்டத்தட்ட படத்தின் இன்னொரு நாயகன் மரகதமணியின் பின்னணி இசை. அந்த நாட்டுக்கூத்து பாடல் செவிகளுக்கும், கண்களுக்கும் காதுக்கும் பிரம்மாண்ட விருந்து.
கதை சொல்லலில் மறுபடியும் நான் மன்னன் என்று நிரூபித்திருக்கிறார், ராஜமவுலி. பாகுபலியை அடுத்து மீண்டும் ஒரு முறை தெலுங்கு சினிமாவை மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும்படி செய்துள்ள ராஜமவுலிக்கு ராயல் சல்யூட்.
