இசைத்துறையில் 25 ஆண்டுகளை தொடரும் யுவன் சங்கர்ராஜா அடுத்த ஆண்டு இயக்குனராகவும் மாறுகிறார்
கடந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என யுவன் தான் அனைத்தும். தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா, 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி, பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து அவர்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தர்மதுரை திரைப்படத்தில் ‘ஆண்டிப்பட்டி கணவாக் காத்து’ பாடலை பாடிய பாடகர் செந்தில்தாஸ் வேலாயுதம், சாம்.பி.கீர்த்தன், வேலு,சுஜாதா வெங்கட்ராமன்,லேகா( Lega sri),பேபி.அதிரா ஆகியோர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜா பாடல்கள் அடங்கிய பாடல்களை பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது….
இவ்வளவு நாள் என்னோட பயணம் அனைத்தையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும், என்னோட வேலை செய்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடன் பிரம்மா இருப்பார் இப்போது அவர் இல்லை அது வருத்தம் தான். என்னை இயக்கிக் கொண்டிருப்பது நீங்கள் தான். உங்களால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்.
என்னுடன் இருக்கும் டீம் மிக நல்ல டீம், ராம்ஜி, கௌசிக், குரு எல்லோருக்கும் நன்றி. நா.முத்துக்குமாருக்கு நான் கொடுத்த இடம் வேறு. அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச்சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய பாடல்களில் இணைந்து வேலை பார்த்திருக்கிறேன். இப்போது விவேக், பா விஜய் என நிறைய பேருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்னுடன் பயணித்த பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றி. இந்த 25 வருடம் எப்படி போனது என்பதே தெரியவில்லை.
முதல் முறை நான் மியூசிக் செய்த போது இப்போது மாதிரி சோஷியல் மீடியா இல்லை. பாடல் ஹிட்டாகிறதா என்றே தெரியாது. யாராவது வந்து சொன்னால் தான் தெரியும், ஒரு முறை அம்மாவுடன் வெளியே போன போது, சிலர் ‘அங்க பாரு.. யுவன் அம்மா’ என்றார்கள். ஓகே நம்மை இசையமைப்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் அம்மாவை நிறைய மிஸ் செய்கிறேன். இன்று கூட நிறைய அவரை பற்றி நினைத்தேன். ஆனால் அந்த இடத்தை கடவுள் புண்ணியத்தில் என் மகள் நிறைவு செய்கிறாள், கடவுளுக்கு நன்றி.
இசைத்துறையில் நான் நிறைய பேருடன் வேலை பார்க்க நினைத்தேன் லதா மங்கேஷ்கர் உடன் வேலை செய்ய நினைத்திருந்தேன் முடியாதது வருத்தம் தான். நான் அதிகம் கேட்பது எப்போதும் அப்பா பாடல்கள் தான், வீட்டில் அவர் பாடல்களை தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது என் மனைவி கூட திட்டுவார் ‘போதும்பா’ என்பார். ஆனால் எனக்கு அவர் பாடல்கள் தான் பிடிக்கும். நடிகர் விஜய் சாருடன் இருக்கும் ஜகதீஷ், ஒரு போட்டோ அனுப்பியிருந்தார். அதில் விஜய் சார் மகன், யுவனிசம் டீ சர்ட் போட்டிருந்தார். பின்னர் விஜய் சாரை சந்தித்தபோது, என் மகன் உங்களோட பெரிய ஃபேன் என்றார், அது மிக மகிழ்ச்சியாக இருந்தது.
நான் இந்தி குறித்து போட்ட டீ சர்ட் குறியீடு கிடையாது, உண்மையிலேயே எனக்கு இந்தி தெரியாது அது தான், அதில் கருத்து எதுவும் இல்லை.
நான் ஆன்லைனில் அதிகம் இருக்க மாட்டேன் என் மனைவி தான் இருப்பார். என்னைப் பற்றி அதில் வரும் விசயங்களை காட்டும் போது, சந்தோஷமாக இருக்கும். எனக்கு படத்தை விட ஃபேமிலி தான் சந்தோசம் தரும். அவர்களுடன் இருப்பதை தான் நான் அதிகம் விரும்புவேன். 25 வருடங்கள் கடந்ததாக தெரியவில்லை, இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். என் அம்மாவோட இழப்பு தான் இறைவன் பற்றிய தேடல் அதிகமாக காரணம், நானா இப்படி இசையமைக்கிறேன் என தேடும்போது ஒரு புள்ளியில் போய் நிற்கும் அல்லவா, அது தான் கடவுள் என நினைக்கிறேன்.
என் தயாரிப்பில் திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன் அடுத்த வருடத்தில் நானே இயக்கப் போகிறேன். ரஜினி சார் படத்திற்கு நான் ரெடி. நிறைய சுயாதீன ஆல்பங்கள் செய்ய வேண்டும் நிறைய புது முயற்சிகள் செய்ய வேண்டும். இந்த பயணம் நல்லபடியாக தொடரும் என நம்புகிறேன்’’ என்றார்.