கொலம்பியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பல், சில கெட்ட போலீஸ் துணையுடன் சென்னையில் பல குற்றச் சம்பவங்களையும் அரங்கேற்றுகிறது. இந்தக் குற்றங்களை தடுக்க உதவி கமிஷனர் அஜித்தை சென்னை நகர காவல் ஆணையர் செல்வா நியமிக்கிறார்.

நேர்மையான காவல்துறை அதிகாரியான அஜித், குற்றம் செய்பவர்களின் கையை உடைத்து விட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பண உதவி செய்யும் அளவுக்கு மனிதநேயம் மிக்கவர். ஆனால், குடும்பத்திலோ குடிகார அண்ணன், வேலையில்லாத தம்பி, வயதான அம்மா என்று கூடுதல் பொறுப்புக்கள். இந்தச் சூழலில் நகரில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள், போதைப் பொருள் தொடர்பான நிகழ்வுகள், கொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடந்து காவல் துறையை அதிர வைக்க…

இந்தக் குற்றங்களைத் தடுக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படும் அஜித், மூன்று குற்றங்களையும் செய்வது ஒரே கும்பல் என்பதைக் கண்டுபிடிக்கிறார். கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருளை வில்லனிடம் இருந்து மீட்பவர், இந்த குற்றங்களின் மூளையாக செயல்படும் வில்லனை நெருங்கும் நேரத்தில் அந்த கொள்ளைக்கார கூட்டத்தில் வேலையில்லாத தனது தம்பியும் இருப்பது தெரிய வர அதிர்ச்சி.

கைதான தம்பியையும் வில்லனையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேனில் அழைத்துச் செல்லும்போது தப்பும் வில்லன், அஜித்தின் தம்பி மூலம் அம்மா உள்ளிட்ட அஜித்தின் மொத்த குடும்பத்தையும் கடத்துகிறான். போதைப்பொருளை ஒப்படைத்தால் மட்டுமே உன் குடும்பம் உயிரோடு திரும்பும் என்கிறான்.

வில்லனை துவம்சம் செய்து அஜித் குடும்பத்தை மீட்டாரா என்பது அதிரடி சாகசங்களுடன் கூடிய கிளைமாக்ஸ்.

படத்தின் துவக்கமே பரபரப்பாக அமைந்திருக்கிறது. பைக்குகளை வைத்து நடக்கும் குற்றங்களை முதல் காட்சியிலேயே காட்சிப்படுத்தும் இயக்குனர், அதை கண்டு பிடிக்கும் காவல் துறை அதிகாரியாக அஜித்தை அறிமுகப்படுத்தும்போது கதையின் ஆரம்பமே அசுரப் பாய்ச்சல்.
அஜித் அட்டகாசமாக இருக்கிறார். யூனிபார்ம் போடாமலே காவல்துறை அதிகாரியின் அந்த கம்பீரம் ரசிக்க முடிகிறது. பைக் சேசிங் காட்சிகளில் ‘இது பைக்கா அல்லது மேஜிக்கா’ என்கிற அளவுக்கு பிரமிப்பு எட்டிப் பார்க்கிறது. அம்மா சென்டிமென்ட்டில் கவலை அப்பிய முகம், வில்லன் கூட்டத்தில் தம்பியை பார்க்கையில் அதிரும் முகம் என நடிப்பில் காட்டும் வேறுபாடு அவர் நடிப்புக்கான இடங்கள்.
நாயகியாக வரும் ஹீமா குரேஷிக்கு இன்னொரு காவல்துறை அதிகாரியாக வந்து அஜித்துக்கு உதவும் பாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். (இவர்கள் முன்ளாள் அல்லது இந்நாள் காதலர்களா? என்பதை கடைசி வரை சஸ்பென்சிலேயே விட்டதற்காக இயக்குனர் வினோத் மீது நமக்கு செல்லக் கோபம்.)

வில்லனாக வரும் கார்த்திகேயா காவல்துறைக்கு சவால் விடும் இடங்களில் ‘அக் மார்க்’ அசுரன். அஜித்தின் தம்பியை மனமாற்றம் செய்யும் இடத்தில் ‘வாய்யா, கார்த்திகேயா’ என்று வரவேற்கத் தோன்றுகிறது. (இத்தனைக்கும் தெலுங்கில் இவர் இளம் ஹீரோ.)
படத்தில் சண்டைக் காட்சிகளும், பைக் துரத்தல் காட்சிகளும் வேற வேற வேற லெவல். இதை பறந்து பறந்து படம் பிடித்த ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா உச்சி முகரப்பட வேண்டியவர்.
யுவன் இசையில் ‘நாங்க வேற மாறி பாடல் ரசனை. அதற்கு அஜித் ஆடும் ஆட்டம் ரகளை.
ஹாலிவுட்டுக்கு இணையான அல்லது அதையும் தாண்டி படத்தில் மிரட்டும் பைக் சேசிங் காட்சிகள் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனை ஹாலிவுட் வரை அழைத்துச் செல்லக்கூடும்.

அஜித்தின் அம்மாவாக வரும் சுமித்ரா, உருப்படாத தன் இளைய மகனுக்காக கலங்கும் இடத்தில் கண்கள் நனைந்து போகிறது. அண்ணன்-தம்பியாக அஜ்யுத் கமார்்-ராஜ் அய்யப்பா, கெட்டபோலீசாக சுந்தர் கச்சிதம்.

மேமிலி சென்டிமென்ட்டில் ஒரு அதிரடி கதையை எடுத்துக் கொண்டு அதை வேகம் குறையாமல் சொன்ன விதத்துக்காக இயக்குனருக்கு ஹாட்ஸ் அப்.