திரை விமர்சனம்

சாயம் பட விமர்சனம்

கல்லூரியில் படிக்கும் அபி சரவணன் சாதி வேறுபாடில்லாமல் நண்பர்களுடன் சகஜமாக பழகி வருகிறார். இவருடைய அத்தை மகள் ஷைனிக்கு அபி சரவணன் மீது காதல். ஆனால் அவரோ ஷைனியை தவிர்க்கிறார்.
இதற்கிடையே குடும்பத்து பெரியவர்கள் அபி சரவணன்-ஷைனி இருவருக்கும் திருமணம் முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் ஒருநாள் அபி சரவணன், தனது நண்பருடன் அத்தை மகள் ஷைனி பேசுவதை தவறாக புரிந்து கொள்கிறார். இதனால் உயிர் நண்பர்களுக்குள் பிரச்சினை வர, அந்த நேர அவசர மோதலில் உயிரை விடுகிறார், நண்பர்.
ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஆண்டனி இதற்காகவே காத்திருந்த மாதிரி இந்த கொலையை சாதிப் பிரச்சினையாக மாற்றுகிறார்.

இந்த சிக்கலான சூழலில் ஜெயிலில் இருக்கும் அபி சரவணனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. அந்த கும்பலிடமிருந்து அபி சரவணன் தப்பித்தாரா? சாதி பிரச்சனை தீர்ந்ததா? என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அபி சரவணன் முற்பகுதியில் சாதுவாகவும், பிற்பாதியில் அதிரடி நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். நாயகியாக வரும் ஷைனி காதல் ஏமாற்றத்தை கண்களிலேயே காட்டி விடும் இடம்அழகு. பொன்வண்ணன், போஸ் வெங்கட், தென்னவன் தங்கள் கேரக்டர்களை நடிப்பால் நிரப்பி வைக்கிறார்கள்.
இயக்கியதோடு வில்லனாகவும் வரும் ஆண்டனி வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். சாதிப் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கியவர் பிற்பகுதியில் அதிரடி திருப்பங்கள் மூலம் படத்தை ஜெட் வேகமாக்கி இருக்கிறார்.படத்தின் பிரதான அம்சம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உயிரோட்டமான சண்டைக் காட்சிகள். அடி ஒவ்வொன்றும் இடியாக விழுகிறது.
நாக உதயனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். ஒளிப்பதிவில் குறிப்பாக அந்த ஜெயில் சண்டைகாட்சியில் சலீம் – கிரிஸ்டோபரின் கேமராவும் மிரட்டுகிறது.