சினிமா செய்திகள்திரை விமர்சனம்

வேலன் படவிமர்சனம்

அப்பாவை மேலும் கஷ்டப்படுத்தி விடக்கூடாது என நினைக்கும் மகன், அதற்காக தன் வாழ்க்கையையே தொலைக்க முயன்றால் என்ன ஆகும்?
காதலியா, தந்தையா என முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் வேலன் யார் பக்கம் நிற்கிறான்? வேலனுக்காக அவனின் தந்தை என்ன செய்கிறார் என்பதே கதை.

பிளஸ்-2வில் மட்டும் 3 ஆண்டுகள் படித்து சாவதானமாக கல்லூரியில் கால் வைக்கும் முகேனுக்கு அதே கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மலையாள மாணவி மீனாட்சியைப் பார்த்ததும் காதல். தன் காதலை உறுதிப்படுத்த ஆசை ஆசையாய் மீனாட்சிக்கு நண்பர்கள் உதவியுடன் மலையாளத்தில் காதல் கடிதம் எழுத, அது கைமாறி அப்புறம் எல்லாமே திசை மாறுகிறது. நாயகியின் ‘எம்.எல்.ஏ. அப்பா’ ஹரிஷ் பெராடிக்கு, முகேனின் அப்பா மீது தீர்க்கப்படாத பழைய வன்மம் ஒன்று பாக்கியிருக்க, அதற்கு இந்த காதல் சம்பவம் கருவியாக…

காதல் என்னவானது, நாயகனின் தந்தை என்னாகிறார் என்பது திரைக்கதை.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த முகேனை நாயகனாக்கி இருக்கும் படம். காதலுக்காக உருகுவது, தந்தை பாசத்தில் ஆவேசமாவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜன், அளவான நடிப்பில் அழகாக வந்து போக, முகேனுடன் போடும் செல்லச்சண்டையில் கவனிக்க வைத்திருக்கிறார் இன்னொரு நாயகி ப்ரிகிடா.

முதல் பாதியில் ராகுலும், இரண்டாம் பாதியில் சூரியும் சிரிக்க வைக்கிறார்கள். நாயகனின் தந்தை பிரபு, நாயகியின் தந்தை ஹரிஸ் பெராடி அனுபவ நடிப்பில் கேரக்டர்களை மனதில் நிறுத்துகிறார்கள். மலையாளம் பேசும் தம்பி ராமையா இனி இதுபோன்ற விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம்.

காதல், காமெடி, பாசப் பின்னணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவின். கோபி சுந்தர் இசையில் முகேன் பாடிய ‘சத்தியமா’ பாடல் காதுக்குள் தேன் மழை.