இந்தியாவிலேயே முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். படத்தின் தரத்தால் உலகப் பட வரிசையில் சேரந்திருக்கிறது.

மண்சாலையில் நடைபெறும் கார் பந்தயத்தையே மட்டி ரேஸ் என்கிறார்கள். அதனால் மட்டி என்பதற்கு இனி மண் சாலை கார் ரேஸ் என்று பொருள் கொள்வோமாக.
ரிதன்-கார்த்தி அண்ணன் தம்பி என்றபோதிலும், குடும்ப பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். கார்த்தி கல்லூரி படிக்கும் போது மட்டி என்ற மண்சாலை ரேசில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். தோற்றவர் கார்த்தியை தோற்கடிக்க சபதம் எடுக்கிறார்.
அதுவரை புலியும் சிறுத்தையுமாக முறைத்துக் கொண்டிருந்த அண்ணன்-தம்பி இந்த ரேசுக்காக இணைகிறார்கள். வில்லனை மண் கவ்வ வைத்து மட்டி ரேசில் ஜெயித்தார்களா? என்பது படத்தின் விறுவிறு கதைக்களம். பள்ளத்திலும் தூசியிலுமாக குதித்தோடி வரும் கார்களை பார்க்க அப்படியொரு ஆனந்தம்.
அண்ணனாக வரும் ரிதன் மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும், வில்லனுடனான சண்டைக் காட்சிகளிலும் அசத்தல் மன்னன். தம்பி கார்த்தி அண்ணனை முறைக்கும் ஆரம்ப கட்டங்களில் வில்லனாக புரமோஷன் பெறுகிறார்.

நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோரில் அனுஷா காதல் அத்தியாயத்தில் கரை சேர்கிறார்.
மட்டி ரேஸ் என்பதே இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, அதைச் சரியாக திரைக்கதையில் கோர்த்து, ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் டாக்டர் பிரகபல். சாலைகளில் தூசி பறக்க மண் சாலைகளில் துள்ளிக் குதித்தபடி ஒடும் கார்களை பார்க்கும்போது, ‘நாம் பார்ப்பது ஹாலிவுட் படமா…இருப்பது ஹாலிவுட்டிலா…’ என்ற பிரமிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
காடு மலை என தாறுமாறாக பறக்கிற கார்களை கேமராவுக்குள் அள்ளிப்போட்டு பிரமிப்பு காட்டிய ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷுக்கு ஆளுயர பொக்கே. ‘கே.ஜி.எப்.’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசை ஆக்–ஷன் காட்சிகளில் அதிரடிக்கிறது. அந்த 20 நிமிட கிளைமாக்ஸ் ரேஸ் காட்சியில் ரசிகன் இருக்கையின் விளிம்புக்கே வந்து விடுகிறான். இயக்குனரின் வெற்றி உறுதிப்படும் இடமும் இது தான்.

மட்டி, மகோன்னதம்.