பட்டுமலை பங்களாவில் பேய்கள் இருப்பதால், அந்த பங்களாவை யாரும் வாங்க முன்வரவில்லை. தப்பித் தவறி யாராவது வாங்க முன்வந்தால் கூட வில்லனின் ஆட்கள் பேய் வேஷம் போட்டு பயமுறுத்தி அவர்களை ஒட்டம் பிடிக்க வைத்து விடுகிறார்கள். இதற்கிடையே பங்களாவை விற்றாக வேண்டும். அதற்கு பங்களாவில் பேய் இல்லை என்று நம்பவைக்க, திருட்டையே தொழிலாக கொண்ட யோகிபாபு குடும்பம் அந்த பங்களாவில் போய் அங்கே பேய் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால் நிஜமாகவே அந்த பங்களாவில் பேய்கள் இருக்கிறது. பேய்க்குடும்பம் யோகிபாபு அண்ட்கோவிடம் நட்பு பாராட்ட…அப்போது அவர்களுடையது மூலிகைக்குடும்பம் என்பதும் கார்ப்பரேட்காரர்கள் அவர்களை கொன்று மூலிகை வைத்தியம் மூலம் கோடிகளை குவிக்க நினைத்ததும் புலனாகிறது.

பிறகென்ன, பேய்களின் நண்பனாகி விட்ட யோகிபாபு அவர்களின் உதவியுடன் வில்லன் கூட்டத்தை துவம்சம் செய்கிறார். இதை திகில் குறைத்து காமெடி நிறைத்து சொன்னதில் கலகல ஆவிப்படமாகி இருக்கிறது.
யோகிபாபு நாயகன் என்றாலும் கதையில் காமெடி நட்சத்திரங்கள் பலருக்கும் வேலை கொடுத்து இருக்கிறார், இயக்குனர் சக்தி சிதம்பரம். நாயகியாக வரும் மாளவிகா மோகனுக்கு அதிக வேலை இல்லை. யோகிபாபு குடும்ப கூட்டணியில் ரமேஷ்கண்ணா அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ஆவிக் கூட்டணியில் எம்.எஸ்.பாஸ்கர் தங்கள் சோக பிளாஷ்பேக்கை விவரிக்கும் இடத்தில் ‘நடிகன்யா…’ சொல்லத் தோன்றுகிறது.

சக்தி சிதம்பரம் செய்திருப்பது பேய்க் காமெடி.