‘கோடியில் ஒருவன்’ – சினிமா விமர்சனம்

தன்னுடைய அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டராக நினைத்து தேனியில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறுகிறார் நாயகன் விஜய் ஆண்டனி.
இயல்பாகவே சமூக சேவையிலும், நேர்மையிலும் மன உறுதி மிக்கவராகத் திகழும் விஜய் ஆண்டனிக்கு அந்தக் குடியிருப்பின் தற்போதைய சூழல் பிடிக்கவில்லை.
அசுத்தத்திலும் அசுத்தமாக இருப்பது. யாரும் அக்கறையில்லாமல் வாழ்வது.. பொது நலன் என்பதையே கருத்தில் கொள்ளாமல் கலந்திருப்பது இதெல்லாம் விஜய் ஆண்டனிக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
தானே அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்துகிறார். படிப்பில் பெயிலாகி ஊர் சுற்றி வரும் சின்னப் பையன்களை அழைத்து டியூஷன் சொல்லிக் கொடுக்கிறார். குப்பைக் கூளங்களை அள்ளுவதற்கு அவர்களுக்கே டிரெயினிங் கொடுக்கிறார். நம்ம இடத்தை நாமதான் சுத்தமா வைச்சுக்கணும் என்று வகுப்பெடுக்கிறார்.
அந்தச் சிறுவர்களை வைத்து கஞ்சா சப்ளை செய்யும் அரசியல் குண்டர்களுடன் இதனால் விஜய் ஆண்டனிக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் சாதாரணமாக ஆரம்பித்து கடைசியில் விஜய் ஆண்டனியின் கையை உடைப்பதுவரையிலும் செல்கிறது.
ஊருக்குத் திரும்பிச் செல்லும் விஜய் ஆண்டனி அம்மாவின் அறிவுறுத்தலால் திரும்பி வந்து கவுன்சிலர் தேர்வில் நின்று ஜெயிக்கிறார். நேர்மையான கவுன்சிலராக வாழ்ந்து காட்டுகிறார். இது லஞ்சம், ஊழலில் திளைக்கும் கவுன்சிலர்களுக்கு கோபத்தைக் கொடுக்க விஜய் ஆண்டனியை கொலை செய்யவும் முயல்கிறார்கள்.
இந்த முறை இன்னும் கோபம் கொண்ட விஜய் ஆண்டனி சட்டப் பேரவைத் தேர்தலில் நின்று தனது பலத்தைக் காட்டுகிறார். இதன் முடிவு என்ன.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
விஜய் ஆண்டனிக்கு நிச்சயமாக இது வெற்றிப் படம்தான். அவரது நடிப்பை கண்டு கொள்ளாமல் பார்த்தால் படம் கடைசிவரையிலும் போரடிக்காமல் செல்கிறது. அதற்கு அவர் பெரிதம் துணை நின்றிருக்கிறார்.
ஆத்மிகா உடன் பயிலும் மாணவியாக அறிமுகமாகி விஜய் ஆண்டனியின் அமைதியான குணத்தினால் கவரப்பட்டு காதலிக்கத் துவங்குகிறார். இவர்களது காதலும் படத்தில் இடையிடையே இளைப்பாறக் கிடைத்த வழியாக ரசிகர்களுக்குக் கிடைக்கிறது.
விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்த திவ்ய பிரபா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும் பூ ராமு முதல்முறையாக விறைப்பான வில்லனாக நடித்திருக்கிறார். சிறப்பு.
கூடுதல் வில்லன்களாக நடித்திருக்கும் மாவட்டச் செயலாளரான கருடா ராம், சூப்பர் சுப்பராயன் உட்பட பலரும் அவரவர் கேரக்டர்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கதைக்கேற்ப அமைந்துள்ளன. ஆனால் திரும்பத் திரும்பக் கேட்கும் லெவலில் இல்லை. பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாரின் கேமிராவில் அடிக்கடி காட்டப்படும் அந்தக் குடியிருப்பு மட்டுமே அழகாக இருக்கிறது. முதலில், அசுத்தமான இடங்களை காட்டிவிட்டு, பின்பு சுத்தமாக காட்டும்போது நமக்கே பரவசமாக இருக்கிறது. எல்லா இடங்களும் இப்படியிருந்தால் எப்படியிருக்கும்..? அதோடு தேனி, கோம்பை பகுதியின் பசுமைகளை அப்படியே படம் பிடித்திருக்கிறார். அழகோ அழகு.
படத் தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இறுக்கியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.
எதைவிட்டாலும் கல்வியை மட்டும் விடவே கூடாது என்னும் கொள்கையை உணர்த்தியமைக்காக இந்தப் படத்திற்கு நன்றி தெரிவிப்போம். அதேபோல் எந்தத் தவறையும் தட்டிக் கேட்க வேண்டும் என்ற உணர்வையும் இந்தப் படம் தருகிறது.
படத்தின் கடைசியில் 2-ம் பாகமும் வரும் என்பதுபோல முடித்திருக்கிறார்கள். அதில் முதல் பாகத் தவறுகளை கொஞ்சம் திருத்திவிட்டு செய்தால் நலமாக இருக்கும்.
