‘காதம்பரி’ சினிமா விமர்சனம்
தமிழில் இன்னொரு பேய்ப்படம். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ளது ‘காதம்பரி’யின் தனித்துவம்.
மழை பெய்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் என 5 பேர் காரில் பயணிக்கிறார்கள். ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியையொட்டி அவர்களின் கார் விபத்துக்குள்ளாகிறது. சற்று தூரத்தில் காட்டுக்குள் பரந்து விரிந்த வீடு ஒன்று தென்பட, மழைக்கு ஒதுங்குவதற்காக அந்த வீட்டுக்குள் செல்கிறார்கள்.
சென்றவர்களில் ஒவ்வொருவராக பலியாகிறார்கள். ஏன்? எதற்காக?
அடுத்தடுத்து நகர்கிற காட்சிகள், பேய்ப்படங்களில் இதுவரை பார்க்காத வித்தியாசமான அனுபவத்தை தருகின்றன.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளது படத்தின் தனித்துவம் என்றால் படத்தில் மொத்தமே 8 கதாபாத்திரங்கள் மட்டுமே என்பது சிறப்பு!
விபத்தில் அடிபட்ட காதலியின் மீது காட்டும் பரிதாபம், உடன் வந்தவர்கள் பேயிடம் சிக்கி உயிருக்குப் போராடும்போது இயலாமையில் தவிப்பது என படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிற அருள் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
அருளின் காதலியாக வருகிற காஷிமா ரஃபி, தங்கையாக வருகிற அகிலா நாராயணன், அகிலாவின் காதலனாக வருகிற சர்ஜுன், இவர்களின் சிநேகிதியாக நின்மி என படத்தில் அத்தனைப் பேரும் புதுமுகங்கள். ஆனாலும், குறை சொல்ல முடியாதபடி எளிமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.
பேசும் திறனற்றவராக வருகிற பெரியவரின் அலட்டலற்ற நடிப்பும் நிறைவு!
உரிய இடத்தில் விறுவிறுப்பைக் கூட்டி, தேவையான இடத்தில் அமைதியைத் தவழவிட்டு பரபரப்பான காட்சிகளை விறுவிறுப்பாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் பிரித்வி.
பேய்ப்படங்களுக்கே உரிய காமெடி களேபரங்கள் இல்லை, இரண்டு காதல் ஜோடிகள் இருந்தும் டூயட் பாட்டு இல்லை, ஹீரோயிஸம் காட்டும் சண்டைகள் இல்லை. சலிப்பு தருகிற அளவுக்கு படம் நீளமும் இல்லை. விறுவிறுப்பான கதை இருக்கிறது.
புதுமுக இயக்குநர் அருளுக்கு நன்றாக கதை சொல்லவும், வித்தியாசமான திரைக்கதை அமைக்கவும் தெரிந்திருக்கிறது. கமர்சியல் அம்சங்களை சேர்த்தால் அடுத்தடுத்த படங்களில் பெரிதாய் கவனிக்க வைக்கலாம்!