கனவு நிறைவேறியது! ‘நீ சுடத்தான் வந்தியா’ பட இசை வெளியீட்டு விழாவில் நாயகி ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா உற்சாகப் பேச்சு!
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா 10.3.2021 புதனன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் படத்தைத் தயாரித்து, கதாநாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் பேசும்போது,
“எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை .எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன்.
பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை.எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன். நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை. அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க வந்தேன்.படப்பிடிப்பில் இருந்த போது கூட என்னால் நம்ப முடியவில்லை .நாம் தான் படம் எடுக்கிறோமா? நாம் தான் இதில் நடிக்கிறோமா என்று எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. எனக்குச் சினிமா பற்றி எதுவுமே தெரியாது. இதன் மூலம் தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
எனது நண்பருக்குத் தெரிந்தவர் மூலம் தான் கதாநாயகி டிக் டாக் இலக்கியா இந்தப் படத்துக்கு அறிமுகமானார், நடித்தார்.
இந்தப் படத்தை 5டி கேமராவில்தான் ஆரம்பித்தோம். பிறகு ரெட் டிராகன், ஏரி அலெக்ஸா வரை கேமராக்கள் பயன்படுத்தினோம். அந்தளவுக்கு பட்ஜெட் பெரியதாகி விட்டது. படம் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும்” என்றார்.
கதாநாயகி இலக்கியா பேசும்போது, “இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும். உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.படக் குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். சினிமா எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன் .நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது .அனைவரும்இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும் “என்றார்.
தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது,
“இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளை பாடலில் பார்த்தோம்.கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும் .ஏன் என்றால் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் நன்றாக ஓடியது .அது மாதிரி சில படங்களும் ஓடின். அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான், பயந்தேன்,மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூட போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது.அதேபோல் இந்த படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன .நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்திருப்பார்கள் .அனைத்து காட்சிகளும் ஒளிப்பதிவாளர்தான் பார்த்திருப்பார்.இந்தப் படம் ஓடிவிடும் கவலை வேண்டாம்.சினிமாவுக்கு இஷ்டப்பட்டு வந்தால் வெற்றி பெறலாம். தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு வரவேண்டாம் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டால் வெற்றி உறுதி. சினிமாவில் எப்படிப்பட்ட பாடல் காட்சிகள் எடுத்தாலும் எடுங்கள். ஆனால் சாராயத்தின் பெருமை பேசும் பாடல்கள் எழுத வேண்டாம் ;அப்படிப்பட்ட காட்சிகள் வைக்க வேண்டாம். ஏனென்றால் இன்று தமிழ் நாடு கெட்டுப் போய் இருக்கிறது. 85% பேர் குடித்துக் கெட்டுப் போயிருக்கிறார்கள். எனவே குடிக்கிற மாதிரி காட்சிகள் தேவையில்லை”என்றார்.
விழாவில் படத்தின் இயக்குநர் துரைராஜ்,ஒளிப்பதிவாளர் செல்வகணேஷ்,இசையமைப்பாளர் துரைராஜன், பாடகர் கானா சேது, பாடலாசிரியர் லோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.