‘தீதும் நன்றும்’ சினிமா விமர்சனம்
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என கருத்து சொல்ல நிறைய படங்கள் வந்தாயிற்று. புதுமுகங்களின் பங்களிப்பில் கூடுதலாய் இன்னொன்று.
ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப் ராஜ் மூவரும் நண்பர்கள். அன்றாடச் செலவுகளுக்காக சின்னச்சின்னதாய் திருடுகிறார்கள். நாட்கள் ஓடஓட பெரிது பெரிதாய் அனுபவிக்கிறார்கள். அந்த ரணகளமும், இடையிடையே காமெடி, காதல், கல்யாண, கானாபாட்டு குதூகலமும்தான் திரைக்கதை.
படத்தை இயக்கி, ஹீரோக்கள் இருவரில் ஒருவராக வருகிற ராசு ரஞ்சித் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
இன்னொரு ஹீரோவாக வருகிற ஈசன், திருட்டை விட முடியாமல் மனைவியின் எதிர்ப்பை சமாளிக்கிற விதம் நெகிழ வைக்கிறது. அவரது நடிப்பு அடுத்தடுத்த படங்களில் இன்னும் உயரம் தொடுவார் என்ற நம்பிக்கை தருகிறது.
ராசு ரஞ்சித்தின் நண்பனாக வருகிறவரின் காமெடி ரசிக்கவும் வில்லன் விஜய் சத்யாவின் நடிப்பு மிரட்டவும் செய்கிறது.
அபர்ணா முரளி கதாபாத்திரமாகவே மாறி பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார். ரிலீஸானதில் முதல் படம் சூரரைப் போற்று என்றாலும் அபர்ணா முரளி நடிகையாக தமிழில் அறிமுகமானது இந்த படம்தான் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
ராசு. ரஞ்சித் – லீஜிமோல் ஜோஸ் ரொமான்ஸ் எபிசோடுகள் லீஜிமோலின் வெட்கப் புன்னகையால் அழகிய கவிதையாக மலர்கிறது!
பின்னணி இசை மூலம் அமைதிக்குள்ளும் அதிர்வலை உருவாக்குகிற வித்தையை நிகழ்த்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சி. சத்யா. ‘வாழையடி வாழை’ பாட்டில் கானா பாலாவின் முத்திரை. கவின்ராஜாவின் ஒளிப்பதிவும் பலம்.
இயக்குநர் ராசு. ரஞ்சித் (நாளைய இயக்குநர்’ டைட்டில் வென்றவர்) காட்சிகளின் உருவாக்கத்துக்காக அதிகம் உழைத்திருக்கிறார். முடிந்தவரை நேர்த்தியாய் பதிவு செய்திருக்கிறார். அதையும் நட்பின் ஆழம், நட்பில் துரோகம், காதலின் பலம் என பலவற்றை எளிய காட்சிகளால் பதிவு செய்திருப்பதையும் பாராட்டலாம். அவருக்கு நடிகராகவும் இயக்குநராகவும் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
படத்தின் கிளைமாக்ஸில் ரத்தச் சிதறல் சற்றே அதிகம் என்பதை [பொருட்படுத்தாவிட்டால், தீதும் நன்றும் – ‘மேக்கிங் நன்று’ என தாராளமாய் சொல்லலாம்!
நான் தொடர்ந்து படித்து வருகிறேன் ராயல்சினிமா பிரபா அண்ணனுக்கு மிகவும் நன்றி….