திகில், திரில், கிரைம் கலந்து செய்த கலவை.

அந்த கிராமத்தில் மாட்டுக் ‘கொம்பு’ மூலம் ஆவிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து வருகிறார் ஒரு சாமியார். அந்த கொம்பு ஒரு பெண்ணின் கைக்கு வருகிறது. அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். கொம்பு செய்யும் சதியால் இன்னொரு பெண்ணுக்கும் நேர்கிறது அதே கதி!

பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள என்ன காரணம்? தெரிந்துகொள்ள பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி திஷா பாண்டே களத்தில் இறங்குகிறார். அவருடன் ஜீவா, பாண்டியராஜன், புவிஷா டீம் இணைகிறார்கள். தற்கொலைகளுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் அதிர்ச்சியான சம்பவங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

திகிலும் திரில்லுமாய் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இ. இப்ராஹிம்.

ஹீரோவாக லொள்ளுசபா’ ஜீவா. வீட்டுக்குள் பேய் நுழைந்தது போன்ற செட்டப்போடு அவர் என்ட்ரி கொடுப்பதாகட்டும், பேய் வேடமிட்டு உடனிருப்பவர்களை அலற விடுவதாகட்டும், இன்பம் சொட்டச் சொட்ட நடனமாடுவதாகட்டும் ஜீவா வாரே வா!

திஷா பாண்டேவுக்கு பாடல் காட்சியில் இளமையைக் காட்ட வாய்ப்பிருக்கும் அளவுக்கு நடிப்புத் திறமை காட்ட வாய்ப்பில்லை.

ஹீரோயினுக்கு தோழியாக படம் முழுக்க வருகிறார் புவிஷா. அவரது நெகுநெகு வளர்ச்சியும் துறுதுறு பார்வையும் ஈர்க்கிறது.

பாண்டியராஜன், லொள்ளுசபா’ சாமிநாதன் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்க, இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டும் கஞ்சா கருப்பு கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்.

காதல் முகம் காட்டி, பின் காமவெறியில் மிதக்கும் யோகிராம் ஏற்ற கதாபாத்திரத்தில் காட்டியிருக்கும் திறம் நிறைவு.

மூன்று பக்கம் பசுமை, ஒரு பக்கம் தண்ணீர் என செழித்துக் கிடக்கிற கிராமத்தின் அழகை தன் கேமராவால், பேரழகாக்கியிருக்கிறார் சுதீப்.

தேவ் குருவின் இசையில், ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி, வேல்முருகன் பாடிய நான்கு பாடல்கள் ரசனைக்கு விருந்து. சாதாரண காட்சிகளுக்கும் பின்னணி இசையால் திகிலூட்டியிருப்பதையும் பாராட்டலாம்.

பேய் குறித்த ஆராய்ச்சி போலீஸ் விசாரணை ரீதியில் பயணிப்பது, அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் யூகிக்க முடிவது சற்றே சலிப்பு.

திகில், திரில், கிரைம் என கலந்துகட்டி கதைக்காக சிரத்தை எடுத்துக் கொண்டவர்கள் திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் ‘கொம்பு’ சீவியிருக்கலாம்.