“‘ராட்சசன்’ படத்தில் அமலாபாலுடன் பள்ளி வளாகத்தில் ஒரே ஒரு காமெடி காட்சியைத் தாண்டி முழுப்படமுமே ரொம்ப சீரியஸாக இருக்கும். சைக்கோ கில்லர் வகை படங்கள் என்பது நம் ஊரில் ரொம்பக் குறைவு. பலரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆகையால் ‘ராட்சசன்’ கதையைக் கேட்டுவிட்டு, கதை பிரமாதமாக இருக்கிறது. இந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்குமா, சி சென்டர்களில் இந்தப் படத்தைப் பார்ப்பானா, அவனுக்கு இந்தக் கதையில் என்ன பொழுதுபோக்கு இருக்கிறது என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு இயக்குநர் சோர்ந்து போய்விட்டார்.

“எல்லாம் ஓகேப்பா. ஆனால், ரசிகர்கள் இந்தப் படத்துக்கு வரமாட்டார்கள்” என்று சொன்ன விஷயம்தான் ‘ராட்சசன்’ இயக்குநருக்கு நடந்தது. ஆகையால், அந்தக் கதையை எடுக்க நல்லதொரு தயாரிப்பாளர் தேவை. இறுதியாக அந்தக் கதையை நம்பிய தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்தார். அமேசான், நெட் ஃப்ளிக்ஸ் எல்லாம் இந்தியாவுக்கு வந்த பிறகு, ரசிகர்களின் சினிமா பார்வை என்பது வளர்ந்திருக்கிறது. ‘அவதார்’ படத்தை தமிழ்நாட்டில் பலரும் திரையரங்கில் சென்று பார்த்திருக்கிறார்கள். ஆகையால் ‘ராட்சசன்’ மாதிரியான படத்தை உருவாக்க முடிந்தது.

‘ராட்சசன்’ கதையைக் கேட்டவுடன் இயக்குநரிடம் சில விஷயங்களைச் சொன்னேன். “எங்கேயுமே கொலை பண்ணும் காட்சியைக் காட்டாதீர்கள். நீங்கள் காட்டிவிட்டீர்கள் என்றால் பெண்கள், குழந்தைகள் படத்துக்கு வரமாட்டார்கள்” என்று சொன்னேன். ஆகையால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து ஷூட் பண்ணினோம்.

இப்போது நீங்கள் அந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்றால் கொலை செய்யும் காட்சியே இருக்காது. அது வசனமாகவே கடந்திருக்கும். ஆகையால்தான் அந்தப் படம் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பார்க்க முடிந்தது. அந்தப் படம் முழுமையாக முடியும் முன்பு சில பேருக்குத் திரையிட்டுக் காட்டினோம். பல பெண்களுக்குப் படம் பிடித்திருந்தது. ஆகையால், பெண்கள் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை வந்தது. இந்தப் பாடம் என்பது ‘ராட்சசன்’ படத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் பொருந்தும். ‘ராட்சசன்’ படம் ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் வெற்றி பெற்று அனைவருக்கும் பெரிய பாடமாக அமைந்தது”.