கடந்த ஒரு வாரமாக சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான போராட்டங்களை, கொந்தளிப்புகளை நாம் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறோம். காவல்துறையின் அடக்குமுறையும் அதிகார பலமும் சாமான்ய மனிதர்களின் வாழ்வை எவ்வாறு குலைத்து போடுகிறது என்பதற்கு இறந்து போன  தந்தை, மகனின் குடும்பத்தினரின் பொங்கி பெருகும் அழுகையே சாட்சி. எளிய மனிதர்களை தங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கும் காவல்துறைக்கு வலுக்கும் எதிர்ப்புகள் இனியொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்காமல் இருப்பதற்கே என அரசு உணர வேண்டும். அனைவரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பினாலும் தமிழர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக விளங்கும் தமிழ் சினிமா தன் கண்டனங்களை மிக கடுமையாக பதிவு செய்தது மிகவும் கவனிக்கப்பட்டது. இது இயல்பானதே. அவசியமும் கூட.

காவல்துறையின் பெருமையை சொல்லும் எண்ணற்ற படங்கள் தமிழில் உண்டு. காவல்துறையின் இன்னொரு பக்கத்தை சொல்லும் படங்களும் உண்டு. ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பதை போல தமிழ் சினிமா இரண்டையுமே காட்சிப்படுத்தி இருக்கிறது. ஆனால் இப்போது நடப்பதை எல்லாம் காணும் போது இனி தமிழ் சினிமா நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே படம்பிடிக்க வேண்டிய நிலை வரும் போல. அந்த அளவுக்கு தமிழக காவல்துறையின் செயல்பாடு வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளது.

காவல்துறையில் நடக்கும் மனித உரிமை மீறலை, காவலர்களை பற்றி எழுப்பப்பட்ட போலி பிம்பங்களை நொறுக்கி அப்பட்டமாக காட்டிய படம் ‘ *விசாரணை* ‘. இப்படம் காவல்துறையின் அனைத்து அழுக்குகளையும் உள்ளதை உள்ளபடியே நமக்கு உணர்த்தியது. சகஜமாக சென்ற நாங்கள் படம் முடிந்து திரையரங்கில் இருந்து வரும்போது ஒருவருக்கொருவர் பேசவே முடியவில்லை. சில நாட்களுக்கு இயல்பாகவே இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. என் நினைவில் பதிந்த காவல்துறையின் அடக்கு முறையை எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்திய இன்னொரு படம் *’எட்டுத்திக்கும் மதயானை* ‘. ஐந்து வருடங்களுக்கு முன் வெளிவந்த இப்படம் சாத்தான்குள சம்பவத்தின் நேரடி பிரதிபலிப்பு.

இந்த படத்தில் வரும் எதற்கு எடுத்தாலும் கை நீட்டும் காவல்துறை அதிகாரி இன்றைய அவலத்தின் நேற்றைய பிம்பம், திரை பிம்பம்! இப்படத்தில் ஒரு காட்சி , காவல் நிலையத்தில் எதற்கு அழைத்து வந்து இருக்கிறார்கள் என்று தெரியாமல், மொழியும் பேச தெரியாமல் ஹிந்தியில் புலம்பி கொண்டே இருக்கும் அப்பாவி இளைஞனை எதோ சாப்டியா என்று கேப்பது போல செவுளில் அடித்து விடுவார் அந்த இன்ஸ்பெக்டர். அடித்த வேகத்தில் அவன் அங்கு இருக்கும் பெஞ்சில் மோதி மயக்கம் அடைந்து விடுவான். உயிரிழந்து விட்டானோ என்று நாம் யோசிக்க, கொஞ்சமும் பதறாமல் அலட்சியமாக பக்கத்தில் இருக்கும் காவலரிடம், “பிரைவேட் ஹாஸ்பிடல் கூட்டி போ” என்பார் அவர். அதிகார மமதையின் இறுமாப்பில் அவர் திரையில் செய்ததற்கும் இன்று சாத்தான்குள காவல் நிலையத்தில் நடந்ததற்கும் எந்த வேறுபாடும் இருக்காது. அதே போல் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அந்த நிலையிலும் ஸ்டேஷனுக்கு வந்த ஒருவரின் சட்டைப்பையில் இருந்து ரூபாயை எடுத்து “பிரைவேட் ஹாஸ்பிடல் செலவுக்கு” என்று சொல்லி காவலரிடம் கொடுப்பார் அந்த இன்ஸ்பெக்டர். காவல்துறையில் உள்ளவர்களின் நடத்தையை போகிற போக்கில் ஆனால்
நுணுக்கமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். அந்த காட்சி அவ்வளவு இயல்பாக இருக்கும், இதுதான் நடைமுறை என்பது போல!

தடாகம் போல் போய் கொண்டு இருக்கும் வாழ்க்கையில் அதே காவல் ஆய்வாளரால் ஒரு பாவமும் அறியாத தன் தம்பி கொல்லப்பட, கிடைத்த நேரடி சிசிடிவி காட்சியை தனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னொரு காவல் நிலையத்தில் கொடுப்பார் இறந்த தம்பியின் அண்ணன். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ யார் குற்றவாளியோ அதாவது இன்னொரு மாவட்ட காவல் நிலையத்தின் அதே அதிகாரிக்கே போன் செய்து அவரை காப்பாற்றி விடுவார். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்த அண்ணனையும் பொய்வழக்கு போட்டு சிறையில் தள்ளுவார்கள். இந்த காட்சியை பார்க்கும்போது சககாவலர்களை காப்பாற்றுவதில் இருக்கும் அக்கறையில் நூற்றில் ஒரு சதவீதம் கூட நம்பி வரும் பொதுமக்களை காப்பதில் இல்லையே என்ற கேள்வி நம்முள் எழுந்து அதன் விளைவாக பரவும் அவநம்பிக்கையை தவிர்க்க முடியாது. அதே போல் எந்தவித குற்ற செயல்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்த இறந்த தம்பியின் அண்ணன் இதன் விளைவாக மீள முடியாத குற்றவாளியாக மாறி விடுகிறார்.

இப்படத்தில் வரும் ” *காவல்துறைங்கிறது பொறுப்பு, அது அதிகாரம் இல்லை* ..அது அதிகாரமா மாறும் போதுதான் எல்லா விஷயமும் தப்பாகுது..பார்த்து நடந்துக்க” என்ற வசனம் இன்று தலைகால் புரியாமல் ஆடும் காவல்துறைக்கு பொளேரென அவர்கள் இருக்க வேண்டிய இடத்தை, செய்ய வேண்டிய பணியை உணர்த்துகிறது. ” *சரியான திசை காட்டவேண்டிய வழி காட்டிகளே தவறான திசைகாட்டினால் சாமான்ய வழிப்போக்கனின் நிலை* ?” என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

ஒருவகையில் இப்படம் தந்தை *ஜெயராஜ்* , மகன் *பென்னிக்ஸ்* இருவருக்கும் செலுத்தப்பட்ட காணிக்கை என்றே கருதுகிறேன்.