உலக மோட்டார் சைக்கிள் தினத்தை முன்னிட்டு ‘ப்ரோஸ் ஆன் வீல்ஸ்’ வெளியிடும் ‘பைக்கர்ஸ் கீதம்’!
இந்த ஊரடங்கின்போது ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தி்லோ, அல்லது பல விதமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறோம். குறிப்பாக பைக் ஓட்டிகள், காதுகளில் ரீங்கரிக்கும் மனதிற்கினிய காற்றின் ஒலியை கேட்டு அனுபவிக்கும் சந்தோஷ சூழலை இழந்திருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற ப்ரோஸ் ஆன் வீல்ஸ் அதிகாரபூர்வ அமைப்பு, டேபிள் பார் 4 இசைக் குழுவுடன் இணைந்து ‘பைக்கர்ஸ் கீதம்’ பாடலை வெளியிடுகிறது. “ஓட்டு”, “விளையாடு”, “கொண்டாடு”, (ரைட் பிளே செலிபரேட்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கீதம் இவ்வார இறுதியில் (19-06-2020) @brosonwheelsofficial மற்றும் இதர சமூக வலைதளங்களில் வெளியாகிறது.
ப்ரோஸ் ஆன் வீல்ஸ் அமைப்பின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் இந்த நிகழ்வு குறித்து நிறுவனர் சுஜித் குமார் கூறியதாவது…
“மோட்டார் சைக்கிள்களும் ராக் இசையும் பிரிக்க இயலாத அளவுக்கு ஒன்றிணைந்து பயணிப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அநேகமாக அனைத்து பைக் விழாக்கள், மோட்டார் சைக்கிள் குறித்தான இசை வீடியோக்கள், பைக்கர்களின் சிற்றுண்டி சாலை போன்றவற்றில் ராக் இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
நமது இல்லங்களிலேயே அபரிமிதமான திறமைசாலிகள் இருக்கின்றனர். நோய் பரவலைக் கட்டுப்டுத்தும் நோக்கில், சர்வதேச அளவில் நீண்ட நாட்கள் வீட்டில் முடங்கியிருக்கும் புதிய தலைமுறை பைக்கர்களுக்காக, ஒரு பாடலை உருவாக்கத் திட்டமிட்டோம். பள்ளிப் படிப்பை முடித்து வெளிவந்திருக்கும் பதின்பருவத்தினரின் இசைத் திறனையை வெளிப்படுத்தும் வகையில், நமது இரண்டாவது ஆண்டை முன்னிட்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சமூகம் நம் மீது செலுத்திய அன்பை, நாம் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். அதற்கான சிறிய முயற்சியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்.
சகோதரத்துவம், சாகசம், சாலைப் பயணம் ஆகியவற்றை பெரிதும் விரும்புகிறவர்களாக பைக் ரைடர்கள் வளர்ந்து வருகின்றனர். பைக் பயணம் உலகிலுள்ள எந்த சந்தோஷத்துக்கும் சற்றும் குறைந்ததல்ல. குழுவாக இணையும் உணர்வுபூர்வமான பைக்கர்கள், சாலைப் பயணங்கள் மூலம் இயற்கையை ருசித்து, துரித கதியில் இயங்கும் வாழ்க்கைத் தளைகளிலிருந்து தம்மைத் தாமே கட்டவிழ்த்துக் கொள்கிறார்கள். ப்ரோஸ் ஆன் வீல்ஸ் அபிசியல் (Bros on Wheels Official) ஆகிய நாம் வெறும் குழு அல்ல – சகோதரத்துவத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள். ஏனோ தானோவென்று இதில் இணையாதீர்கள். இந்தப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பயணத்தில் நீங்கள் இணையும்போது, சக நண்பனை சந்திக்க மாட்டீர்கள். உங்களைப் போலவே சகோதரத்துவத்தை நேசிக்கும் மற்றொருவரை சந்திப்பீர்கள். பைக் ஓட்டுவோம்….விளையாடுவோம்…. கொண்டாடுவோம் (Let’s Ride.. Play.. Celebrate)” இவ்வாறு கூறினார் திரு.சுஜித்.
மேலும் இசைப்பாடல் குறித்து பேசுகையில், “பைக் ஓட்டிகளுக்கு இயல்பாகக் கிடைக்காத மகிழ்ச்சியை அளிக்க வல்லது இசை. மிகச் சிறந்த இசையை குறிப்பிட்ட வகைப்பாட்டில் அடக்க முடியாது. பைக் ஓட்டிகள் பலரும் அருமையான இசையில் கட்டுண்டு கிடப்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறினார்.
பைக் ஓட்டுதல், சாலைப் பயணங்கள், சகோதரத்துவம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து பெங்களூருவைச் சேர்ந்த சுஜித் குமார் உருவாக்கியிருக்கும் ‘ப்ரோஸ் ஆன் வீல்ஸ்’ அமைப்பு, சகோதரர்களைப்போல் பழகுபவர்கள் மற்றும் பொறுப்பான பணியில் இருப்பவர்களை உள்ளடக்கியது. இந்த அமைப்பானது #BROCODE என்ற தலைப்பின்கீழ் கேன்சர் நோயாளிகள், ராணுவ வீரர் குடும்பத்தினர் ஆகியோருக்கும் உதவும் வகையில் பல்வேறு சமூக நலப்பணிகளையும் பெருமளவில் செய்து வருகிறது.
கோபாலன் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த விவேக், உஜ்வால் உலகப் பள்ளியைச் சேர்ந்த தீபக், ரெயான் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த மாளவிகா ஆகிய இசைத் துறையில் திறமையான இளைஞர்களைக் கொண்டது ‘டேபிள்4 பார் யூ’ அமைப்பு. விவேக்கின் தந்தை பிரதீப் இந்த இசைக் குழுவை வழி நடத்துகிறார். குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ராகேஷ் இந்த இசை ஆல்பத்துக்கான பாடல்களை எழுதியிருக்கிறார்.