திரைப்படங்கள்

ஐ பி எல் – திரை விமர்சனம்

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விட்டதாக தவறாக சந்தேகப்பட்டு அவனை காவல் நிலையம் கொண்டு சென்று தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த இளைஞன் இறந்து போக…
கொல்லப்பட்டவனின் செல்போனை ஆராயும் போது அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். இது விஷயம்
சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிக்குப் போக…இப்போது காட்சி மாறுகிறது.
அந்த லாக்கப் மரணத்திற்கு வாடகை கார் ஓட்டும் அப்பாவி கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள். மேலிடத்து அழுத்தத்தால் அவரை அடித்து நொறுக்கி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள்.

கிஷோரின் தங்கையை நாயகன் டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார். அந்த உரிமையில்
கிஷோர் மீதான பொய் வழக்கை உடைத்து நீதியை நிலை நாட்ட அதற்கான ஆதா ரங்களை திரட்டும்
முயற்சியில் தீவிரம் ஆகிறார். அதில் வெற்றி பெற்றாரா? கிஷோரைக் காப்பாற்றினாரா? அந்த வீடியோவில் என்ன இருந்தது?
கேள்விகளுக்கு விடை பரபர கிளைமாக்ஸ்.

காவல் நிலையங்களில்
லாக்கப் மரணங்கள் சகஜமாகி விட்ட நிலையில் அதை பின்புலமாக எடுத்துக் கொண்டு, கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
டி.டி.எஃப்.வாசன் தான் நாயகன் என்றாலும் கிஷோர் தான் கதை நாயகனாக படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். போலீஸ் விசாரணையில் அவர் கொடுமைப்படுத்தப்படும் காட்சிகளில் கண்களில்
கண்ணீர்ப் பிரவாகம்.
ரத்தம் சொட்டச் சொட்ட அத்தனை அடி உதைகளையும் வாங்கிக்கொண்டவர் தன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு துடித்துப் போகிற இடம் இன்னும் ரணம்.

ஃபுட் டெலிவரி பாயாக வருகிறார் டிடிஎஃப் வாசன். புதியவரானாலும் காதல் காட்சிகளிலும் பாடல்களுக்கான நடனக் காட்சிகளிலும் அசத்தி விடுகிறார்.
ஒரு பைக் ரேஸ் சண்டைக் காட்சியிலும் மிரள வைக்கிறார்.

கிஷோரின் மனைவியாக அபிராமி வருகிறார் போலீஸ் கொடுமைப்படுத்தும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறார். போஸ் வெங்கட் கொடூர குணம் கொண்ட போலீசாக வருகிறார் .சில காட்சிகளில் வந்தாலும் சிங்கம்புலி தன் இருப்பை நிரூபிக்கிறார். எதிர்மறையான போலீஸ் எஸ்.பியாக ஹரிஷ் பெராடியும் நேர்மையான போலீஸ் எஸ்பியாக திலீபனும் காவல்துறையின் இருவேறு முகங்களை பிரதிபலிக்கிறார்கள்.
முதல்வராக ஆடுகளம் நரேன் சில காட்சிகளே என்றாலும் அதிலும் தனது நடிப்பு
தடத்தை ஆழமாக பதிக்கிறார்.
அஸ்வின் விநாயகமூர்த்தி
இசையும் எஸ் பிச்சுமணியின் ஒளிப்பதிவும் கதையோடு காட்சிகளின் வீரியத்தை அதிகப்படுத்தி விடுகிறது.
எழுதி இயக்கிய கருணாநிதி சுயநல அரசியல்வாதிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதத்திலேயே ஜெயித்து விடுகிறார். காவல் நிலைய கொடுமைகள் மட்டும் ரொம்பவே ஓவர்டோஸ்.
நீதி பிழைத்த அந்த கிளைமாக்ஸ் சூப்பர்.