திரை விமர்சனம்

ரேகை – இணையத் தொடர் விமர்சனம்

பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் மர்ம நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு
எம்.தினகரன் உருவாக்கிய வெப் சீரீஸ் ‘ரேகை.’ யூகிக்க முடியாத திருப்பங்களோடு, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய புலனாய்வு திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
6 எபிசோட்களையும் ஒன்றாக பார்த்தாலும், நேரம் போனதே தெரியாதவாறு விறு விறு கதையமைப்பு இ தன் சிறப்பம்சம். ஒவ்வொரு எபிசோட்டிலும் ஒரு திருப்பம், அதன் மூலம் நகரும் கதையின்
அடுத்த கட்டம் ஏழாவது எபிசோடு வரை திரில்லருக்கு குறையாத கதை அமைப்பு இதன் சிறப்பம்சம். கதையில் நிகழும் கொலை சம்பவங்களை அறிவியலோடு இணைத்து காட்சிகளை வடிவமைத்த விதம் இன்னும் ஸ்பெஷல்.
சரி, விமர்சனத்திற்கு வருவோம்.
ஆண்கள் விடுதி குளியல் அறையில் இளைஞன் ஒருவன் செத்துக் கிடக்கிறான். குளியலறை உள்ளே தாழ்ப்பாள் போட்டு இருக்கும் நிலையில் அது தற்கொலையாகத் தானே தோன்றும்.

ஆனால் இறந்து கிடப்பவன் வெற்றி என்ற காவல் துணை ஆய்வாளரால் (பால ஹாசன்) பிரண்ட்ஸ் ஆஃப் போலீசாக ஆக்கப்பட்ட நபர் . அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்பது வெற்றியின் நம்பிக்கை.
குளியல் அறை இரும்புக் கதவின் உள்புறத் தாழ்ப்பாளை கதவின் வெளிப்பக்கம் காந்தம் வைத்து, நகர்த்தி திறந்து உள்ளே போகும் கொலைகாரன் பிளீச்சிங் பவுடரில் அமிலத்தைக் கொட்டி விஷப் புகை வர வைத்து அவனை கொன்று இருப்பதை வெற்றி கண்டு பிடிக்கிறார்.
அடுத்தடுத்து இதே பாணியில் இந்த இளைஞனையும் சேர்த்து மொத்தம் நான்கு கொலைகள்.
பிணவறை
ரிப்போர்ட்டில் இருப்பது நான்கு பேருக்கும் ஒரே கைரேகை . இரட்டை குழந்தைகளுக்கு கூட ஒரே மாதிரி கைரேகை இருப்பதில்லை என்னும் போது இது எப்படி சாத்தியம்?
இந்த கதைக்குள் வழக்கை விசாரிக்கும் துணை கமிஷனர் வெற்றிக்கும் பெண் காவலருக்கும் (பவித்ரா ஜனனி) காதல் .
இவர்களின் நிச்சயதார்த்த நாளுக்கு முதல் நாள் ராத்திரி, பெண் காவலரின் அக்கா கணவன் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வர, அவர் யார் என்று தெரியாமலே கன்னத்தில் சப் என்று ஒரு வெற்றி ஒரு அறை விட… நின்று போகிறது திருமணம்.
இப்போது நாயகனின் காதலிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள்.
நாயகனின் காதல் இப்படி நட்டாற்றில் நிற்க…
இப்போது இந்த கொலை வழக்கை முன்னாள் காதலரான நாயகனுடன் இணைந்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது.
தீவிரமான துப்பறிதலில்
வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட மருந்தை இந்தியாவில் மனிதர்கள் மேல் செலுத்தி ஆராய்ச்சி செய்யும் குழு பற்றி தகவல் கிடைக்கிறது . அடுத்தடுத்து கொல்லப்பட்ட நாலு இளைஞர்களும் இந்த ஆராய்ச்சிக்கு சோதனை எலியாக பயன்படுத்தப்பட்டு இருந்த தகவல் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து இளைஞர்கள் அந்த மருத்துவக் குழுவை எதிர்க்கும் போது தான் அடுத்தடுத்த கொலைகள் நிகழ்ந்தது வெட்ட வெளிச்சமாகிறது.
இந்த கொலை கும்பலின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையிலிருந்து தடை போடப்படுகிறது.
அதையும் தாண்டி நாயகன் அந்த கும்பலை கண்டு பிடிக்கிறார். அந்தக் கும்பலின் நெட்வொர்க் எத்தகையது என்பது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.
சுமார் முப்பத்தைந்து வருடத்துக்கு முன்பு ராஜேஷ்குமார் எழுதிய ‘உலகை விலை கேள்’ என்ற கிரைம் நாவலின் கதையின் மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் கதை பண்ணியிருக்கிறார்கள்.
துடிப்புள்ள போலீஸ் அதிகாரியாக பால ஹாசன். இவரது துப்பறியும் பாணியே தனி ஸ்டைல். போலீஸ் ஏட்டாக இருக்கும் பவித்ரா ஜனனியுடனான இவரது காதல் இந்த சீரியஸ் கதையுடன் ஒட்டாமலேயே விலகிப் போகிறது. அக்கா கணவரின் கட்டாயத்துக்காக இன்னொருவருடன் நிச்சயதார்த்தம்…ஓ… இதற்குப் பெயர்தான் காதலா…

மார்ச்சுவரியில்
பிணங்களை போஸ்ட் மார்ட்டம் செய்யும் மருத்துவராக வினோதினி நடிப்பில் தனித்து தெரிகிறார். வில்லியாக வரம் அஞ்சலிராவ் கன கச்சிதமான நடிப்பு.
ஆர் எஸ் ராஜ் பிரதாப்பின் இசை இந்தத் திரில்லர் கதையை நம்மோடு நெருக்கமாக்குகிறது.

ஒரு திரில்லர் கதையை திருப்பு மனைகளுடன் தொடக்கம் முதல் முடிவு வரை வேகம் குறையாமல் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் எம். தினகரன் தேர்ந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார்