செய்திகள்திரை விமர்சனம்

ஃப்ரைடே — திரை விமர்சனம்

வழக்கமான கூலிப்படை கதை. அதை வழக்கத்துக்கு மாறாக திரில்லருடன் சுவாரஸ்யம் இணைத்து தந்திருக்கிறார்கள்.
மைம் கோபி கூலிப்படை வைத்துக்கொண்டு தாராளமாக அதிரடி தடாலடி என வலம் வருபவர். தனக்குப் பணியாதவர்கள் எதிரிகள் என யாராயிருந்தாலும் தனது ஆட்களை அனுப்பி காலி பண்ணி விடுவார்.
அதே நேரம் அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருக்கிறார். வரும் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. இதனால் கட்சி எம் எல் ஏ வேட்பாளராக தேர்ந்தெடுத்த ஒருவரை இவரே ஆள் வைத்து போட்டுத் தள்ளுகிறார்.
அவரது நம்பிக்கைக்குரிய அடியாள் தான் கதையின் நாயகன்.
நேர்மையான போலீசாக இருந்த தன் தந்தையை கொன்றவனை சிறுவயதிலேயே போட்டு தள்ளியவன், அதற்குப் பிறகு எடுத்த கத்தியை கீழே போட முடியாமல் மைம் கோபியிடம் அடியாளாக சேர்கிறார்.


தனது வாழ்க்கை தான் வெட்டுகுத்து என்று திசை மாறிவிட்டது. தன் ஒரே தம்பியாவது நல்ல வேலை மனைவி குடும்பம் என்று நிம்மதி வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் தான் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பிக்கும் அண்ணனைப் போல் அடிதடி தொழிலில் சாதிக்க வேண்டும் என ஆசை வருகிறது. அதனால் அண்ணனுக்கே தெரியாமல் மைம் கோபியின் அடியாள் கூட்டத்தில் தம்பியும் ஒருவனாகிறான்.
இந்நிலையில்தான் மைம் கோபியின் அரசியல் எதிரியை கொல்லப்போகும் பட்டியலில் நாயகனின் தம்பியும் இணைந்து கொள்கிறான். அந்த மோதலில் அரசியல் புள்ளியோடு சேர்ந்து இவனும்
பலியாகிறான்.
தம்பியின் இழப்புக்கு அண்ணன் எடுத்த முடிவு என்ன? மைம் கோபி அண்ட் கோ வின் தாதா சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததா என்பதை திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் ரத்தம் சொட்டச் சொட்ட தந்திருக்கிறார்கள்.

நாயகன் அனீஸ் மாசிலாமணி அந்த பாசமிகு அண்ணன் கேரக்டரில் ஜொலிக்கிறார். ஆவேசமாய் அரிவாள் தூக்கும் இடங்களில் பயமுறுத்துகிறார்.
அறிமுக நாயகன் போல் இல்லாமல்
யதார்த்த நடிப்பில் மனதில் பதிகிறார். அவரது தம்பியாக வருபவரும் நடிப்பில் தேறுகிறார்.
படத்தின் திருப்புமுனை கேரக்டரில் வரும் தீனா,
தாயைக் கொன்றவனை பழிவாங்கத் துடிக்கும் கேரக்டரில் கன கச்சித நடிப்பை வழங்கி இருக்கிறார்.
தாதா கேரக்டரில்
மைம் கோபி சாலப்பொருத்தம்.
எழுதி இயக்கி இருக்கிறார் ஹரி வெங்கடேஷ். கதைக்குள் கதை, அதற்குள் பிளாஷ் பேக் என்று படம் போனாலும் டெம்போ குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.
இதற்கு அவருக்கு பக்கத்துணையாக ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், இசையமைப்பாளர் டுமே இணைந்து இந்த திரில்லர் கதைக்கு மெருகூட்டி இருக்கிறார்கள்.
ஆயுதம் நிரம்பிய ஒரு கதைக்குள் தம்பி பாசம், உறுத்தும் மனசாட்சி என சென்டிமென்ட்டும் இணைந்து கொண்டதில் இந்த ப்ரைடே சிறப்புக்கு உரியதாகி விடுகிறது.