மாஸ்க் – திரை விமர்சனம்
நகரின் மையப் பகுதியில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை நடக்கிறது.அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளுகிறார்கள். அரசியல்வாதி பவனால் ஓட்டு போடுவதற்கு மக்களுக்குக் கொடுப்பதற்கும் தேர்தல் செலவுக்குமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் அது. சிலர் நடிகர் எம் ஆர் ராதாவின் முகமூடி அணிந்து கொண்டு இந்த கொள்ளையை நடத்துகிறார்கள். கொள்ளை போன பணம் யாரிடம் இருக்கிறது என்பதை கண்டறிய தனியார் டிடெக்ட்டிவ் நபரான கவின் வருகிறார்.
சமூக சேவைகள் என்ற பெயரில் சமூக விரோத செயல்களைய செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார். இவர்கள் இருவரும் தீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் அவர்களும் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கிறார்கள். இவர்களில் பணம் யார் வசம் கிடைத்தது? என்று சொல்வதே ’ மாஸ்க்’ படத்தின் மீதிக்கதை. படத்தின் முதல் காட்சியில் தொடங்கும் பரபரப்பு கடைசி வரை நீடிக்கிறது. இதுவே திரைக்கதைக்கான வெற்றியும் ஆகிவிடுகிறது. சமூக சேவகி என்ற பெயரில் பெண்களை வைத்து அரசியல்வாதிகளி டம் காரியம் சாதிக்கும் கேரக்டரில் ஆண்ட்ரியா வருகிறார். அந்த வில்லி கேரக்டரை புதுசாக செய்து இருக்கிறார்.
அரசியல்வாதியாக வரும் பவன், தேர்ந்த அரசியல்வாதியின் முகங்களை மாஸ்க் இல்லாமலே வெளிப்படுத்துகிறார்
படத்தின் திருப்புமுனை கேரக்டரில் வந்து அப்ளாஸ் அள்ளுகிறார் சார்லி. வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியான், ரெடின் கிங்ஸ்லி உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.ஒவ்வொருவரும் தங்கள் கேரக்டர்களில் தங்களைக் கவனிக்க வைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் கேமரா படத்தின் இன்னொரு பலம்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், கண்ணுமுழி, வெற்றி வீரனே பாடல்கள் ரசிக்க வைப்பதுடன் கதையோட்டத்துக்கும் உதவுகிறது .
எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக்.
இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் பழைய இலக்கணத்தைத் கொஞ்சம் மாற்றி சிந்தித்திருக்கிறார்.
நடுத்தர மக்களுக்குக் கோபம் வந்தா நாடு தாங்காது என்கிற கருத்தைச் சொல்ல விழைந்திருக்கிறார். அதற்கான காட்சிகளும் கச்சிதம்.
பிரியம் காட்ட அன்பு மகள் இருந்தும் கவின் தன் மனைவியை பிரிந்து இருப்பது ஏன் என்பதற்கும் விளக்கம் சொல்லி இருக்கலாம்.
–மறைக்கப்பட்ட முகங்களின் வலியே இந்த மாஸ்க்.
