திரை விமர்சனம்

கும்கி-2 – திரை விமர்சனம்

மலைப்பகுதியில் வாழும் மதிக்கு தந்தை இல்லை. தாய் இன்னொருவருடன் வாழ்கிறாள். அவர்கள் ‘குடி’யும் கும்மாளமுமாக பெரும்பாலும் மதி மயங்கிய நிலையிலேயே இருக்க, இவர்களால் சிறுவன் மதி பாதிக்கப்படுகிறான்.
பள்ளியிலும் அவனுக்கென்று நண்பர்கள் யாரும் இல்லாமல் தாழ்வுணர்ச்சியில் இருக்கிறான். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் அவனை அரவணைக்கிறார். அன்பு காட்டுகிறார். மனிதன் நேசிக்கா விட்டால் என்ன… இயற்கையை நேசி. அது உன்னை நேசிக்கும் என்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் பக்கத்துக் காட்டில் ஒரு யானைக் குட்டி பள்ளத்தில் தவறி விழுந்து விட, அதை பள்ளத்திலிருந்து மீட்கிறான். அது முதல் மதியும் யானைக் குட்டியும் இணை பிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். இதனை அறிந்து கொண்ட அவனது தாய் அந்த யானையை பெரிய விலைக்கு விற்க ஏற்பாடு செய்கிறாள். மதிக்குத் தெரியாமல் ஒரு நாள் விற்றும் விடுகிறாள். இது தெரியாமல் மதி யானையைத் தேடி
அலைகிறான்.

பலனில்லை. யானை அவன் கண்ணில் படவே இல்லை. ஒரு நாள் அவனைப் பார்த்த ஆரம்ப பள்ளி ஆசிரியர் அவனிடம், நாம் உண்மையாய் நேசிக்கும் போது அந்த நேசம் ஒரு நாள் நம்மை தேடி வரும். எனவே முதலில் கல்லூரி படிப்பை முடி என்று ஆலோசனை தருகிறார். அவர் சொன்னபடி கல்லூரி படிப்பை முடித்த கையோடு யானையை தேட பயணப்படுகிறான். அப்போது யானை இருக்கும் இடம் அவனுக்கு தெரிய வருகிறது. யானையை மீட்டு காட்டுக்குள் செல்கிறான்.
அதே நேரம் ஆட்சியை கைப்பற்ற சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு யானையை பலி கொடுக்க வேண்டும் என்று சோதிடர்கள் சொல்ல…
அவர்கள் சொன்ன எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இந்த யானை அரசியல்வாதிகளுக்கு கிடைத்த நேரத்தில்தான் மதியின் பார்வையில் படுகிறது. மதி யானையை காட்டுக்குள் கடத்திப் போய் விட… ஆனாலும் அரசியல்வாதிகளின் கைக்கூலியான வன இலாகா அதிகாரி மதியை ஏமாற்றி யானையை அதை பலியிடும் இடத்தில் கொண்டு சேர்க்கிறார்.

யானை பலி யிடப்பட்டதா… மதியால் யானையை காப்பாற்ற முடிந்ததா என்பது பரபர கிளைமாக்ஸ்.
காடு மலை,அருவி என ஆரம்பக் காட்சியிலேயே நம்மை அந்த இயற்கை சூழலு க்குள் நம்மை கையைப் பிடித்து அழைத்து சென்று விடுகிறார், ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார். நாயகனாக அறிமுக நாயகன் மதி நடித்திருக்கிறார்.

வெளி உலகத்தை அதிகம் நேசிக்கும் அவர், யானைக்கு ஒரு ஆபத்து என்றதும் தவிக்கிறார். அதைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கிறார். இப் படியான பாத்திரத்தில் அறிமுக நாயகன் என்ற சுவடே இல்லாமல் மதி வாழ்ந்திருக்கிறார் .
படத்தில் ஜூனியர் மதியாக நடித்துள்ள அந்தச் சிறுவனும் துறுதுறுப்பான நடிப்பில் கவர்கிறான்.
மதியின் பள்ளி ஆசிரியராக வந்து ஆற்றுப்படுத்தும் பாத்திரத்தில் கோலங்கள் தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் திருச்செல்வம் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மதியின் தாயாக எதிர்மறை சாயல் கொண்ட பாத்திரத்தில் சூசன் நடித்திருக்கிறார். ‘மைனா’வில் வில்லத்தனம் காட்டிய அதே சூசன் தான். இதிலும் அதே வில்லத்தனம்.
யானையை தேடிப் பிடிக்கும் போலீஸ் படையின் தலைவராக ஹரிஷ் பெராடி வருகிறார்.அந்த எதிர்மறை பார்த்திரத்தில் பளிச்சிடுகிறார். மதியுடன் காட்டுக்குள் பயணிக்கும் நண்பராக வரும் ஆண்ட்ரூஸ் நடிப்பில் பட பட பட்டாசாக வெடிக்கிறார்.
வனத்துறை அதிகாரியாக வந்து நாயகனை திசை திருப்பும் கேரக்டரில் அர்ஜுன் தாஸ் அசத்துகிறார். ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் அரசியல்வாதியாக பிளாரண்ட் பெரைரா சாலப்பொருத்தம்.

நாயகியாக அல்லாமல் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கலாம் ரகம். காடு மலை நீர்வீழ்ச்சி என்று வந்துவிட்டால் இவரது ஆதிக்கம் தான் என்று சொல்லும் அளவுக்கு ஒளிப்பதிவில் எம் சுகுமார் நம் கண்களில் நிறைகிறார்.

முதல் பாகத்தில் ஒரு ஆழமான காதலை சொன்ன பிரபு சாலமன், இரண்டாம் பாகத்தில் யானைக்கும் மனிதனுக்குமான ஆழமான அன்பை சொல்லி இருக்கிறார். அது கூட ஒரு அழகான காதல் மாதிரி மனதை வசீகரித்து விடவே விடுகிறது.