தாவூத் – திரை விமர்சனம்
தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த தாவூத், அங்கே போதைப்பொருள் கடத்தலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதைப் பொருளை கைப்பற்றும் முயற்சியில் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை ஈடுபடுகிறது.
அதே சமயம், தாவூத்தின் கடத்தல் பணிகளை 20 வருடங்களாக செய்து வந்த தீனாவும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறார். தாவூத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பும் காவல்துறை உதவி ஆணையர் ஒருவரை கைக்குள் போட்டுக் கொண்டு அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறது.
இந்த நிலையில், தாவுத்தின் சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் பொறுப்பில் இருக்கும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் மூலம் செய்தால் இந்த தொழிலில் கரை கண்ட எதிரிகள் ஆட்டையை போட்டு விடுவார்கள் என்பதால், இந்த தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத வாடகை கார் ஓட்டுநரான லிங்காவை தேர்வு செய்கிறார். பணத் தேவைக்காக கடத்தல் பணியில் ஈடுபடும் அப்பாவி லிங்கா, திட்டமிட்டபடி தாவூத் சரக்கை உரிய இடத்தில் சேர்த்தாரா ?, நிழல் உலகத்தில் வாழும் தாவூத் வெளிச்சத்திற்கு வந்தாரா ? என்பது திருப்பு முனையுடன் கூடிய சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ்.
வாடகை கார் டிரைவராக வலம் வரும் லிங்காவுக்கு இதுவரை அவர் நடித்திராத கேரக்டர். அவரும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாரா ஆச்சர், தமிழ் சினிமாவில்
இதுவரை இருந்த மரபை உடைத்திருக்கிறார் நாயகி என்றால் நாயகனுக்கு ஜோடியாகத் தானே இருப்பார். இங்கோ அவர் சுதந்திரமாக வில்லனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். பாதி படத்துக்கு மேல் காணாமல் போனவர் கிளைமாக்சிலாவது வந்து எட்டிப் பார்ப்பார் என்று பார்த்தால் ஊஹூம்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக அர்ஜெய் நடிப்பில் நல்ல வேகம். தாவூ த்தின் கடத்தல் தொழிலோடு சம்பந்தப்பட்ட திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக் பொருத்தமான பாத்திரத்தேர்வுகள். நாயகனின் நண்பனாக வரும் ஸாரா, ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். போலீஸ் கமிஷனராக ராதாரவி, கடத்தல் கும்பலுடன் கை கோர்க்கும் அசிஸ்டன்ட் கமிஷனர் ஜெயக்குமார் வரும் கொஞ்ச நேரத்திலும் தனது இருப்பை பதிவு செய்து விடுகிறார்கள்.
ராக்கேஷ் அம்பிகாபதியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். ரசிக்கலாம். ஆக்ஷன் திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன் பின்னணி இசை பயணிக்கிறது
சரத் வளையாபதி-, பிரேண்டன் சுஷாந்த் கேமரா,
ஆக்ஷன் திரில்லர் உணர்வுகளை அப்படியே ரசிகர்களிடம் கடத்தி விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் ராமன், தாவுத் மற்றும் அவரது போதைப் பொருள் கடத்தல் பின்னணியை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் பரபரப்பாக கதை சொல்லியிருக்கிறார்.
நாயகனின் கிளைமாக்ஸ்
ட்விஸ்ட் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
இந்த தாவூத் பரபரப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களின் மனதை கடத்தி விடுகிறான்.
