நாயகன் – திரை விமர்சனம்
சில படங்கள் மட்டுமே நேற்றும் இன்றும் நாளையும் ரசிகர்களின் ரசனைப் பட்டியலில் இருக்கும்.அப்படி ஒரு படமே நாயகன்.
வெளி வந்து 39 ஆண்டுகளுக்கு பிறகும் அதன் மெருகு மாறாமல் அதன் உணர்வும் மாறாமல் திரைக்கு வந்து இருக்கிறது நாயகன்.
நடிகர் கமல்ஹாசனுக்கு நாயக பிம்பத்தை உறுதி செய்த படம் இது. மும்பையில் கோலோச்சிய வரதராஜ முதலியார் வாழ்க்கை பின்னணியை கதையாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.(சினிமாவுக்காக வேலு நாயக்கர்) அதில் நாயகனாக தன்னை முழுசாக பொருத்திக்கொண்டார் கமல்.
மக்களால் வாழ்பவன் தலைவன் அல்ல. மக்களுக்காக வாழ்பவனே தலைவன். அப்படி வாழ்ந்த வரதராஜ முதலியார் சரித்திரத்தில் படம் முழுக்க வரதராஜ முதலியாராகவே வாழ்ந்து நடிப்பு சரித்திரம் படைத்திருந்தார் கமல்.
சரி கதைக்கு வருவோம்.
ஒரு
மனிதனை சூழ்நிலை எப்படி குற்றவாளியாக மாற் றுகிறது?அதே மனிதன் மக்களின் இதயத்தில் எப்படி தெய்வமாக உயர்கிறான் என்பதை கதையின் இயல்புத் தன்மை மாறாமல் சொல்லி இருக்கிறார் இயக்கிய மணிரத்னம்.
போலீசாரால் தந்தையை இழந்த சிறுவன் ஒருவன் மும்பை குடிசைப் பகுதி மக்களின் ஆதர்ச நாயகனாக உயர்கிறான் என்பதை திரைப் படுத்திய விதத்தில் படம் ரசிகனோடு நெருக்கமாகி விட்டது.
அரசுக்கு எதிராகப் போராடும் தொழிற்சங்க தலைவரின் மகன் சக்திவேல் போலீசால் கைது செய்யப்படுகிறார். தந்தையை ஏமாற்றி கொன்ற போலீசாரை பழி வாங்கி, மும்பைக்கு தப்பிச் செல்கிறார். அங்கு நல்ல மனம் கொண்ட கடத்தல் வியாபாரி ஹுசைன் பாய் அவரை தத்தெடுத்து வளர்க்கிறார்.
வளர்ந்தபின் ஹுசைனின் வழியில் கடத்தல் தொழிலில் ஈடுபடும் வேலு, நீதியற்ற சமூகத்தின் நடுவே சாதாரண மக்களின் நம்பிக்கைப் பிரஜையாக மாறுகிறார்.
மனைவி நீலா (சரண்யா) உயிரிழந்ததும், மகனின் மரணமும், மகளின் பிரிவும் — அவர் வாழ்க்கையின் துயர அத்தியாயங்களாக மாறி விட…
இறுதியில், தன் பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் நடுவே வாழ்ந்த வேலு, நீதிமன்றத்தில் இருந்து வெளிவரும் தருணத்தில் சீறிவந்த துப்பாக்கி தோட்டாவுக்கு பலியாகிறார். தன் தந்தை செத்துப் போக இவர்தான் காரணம் என்று பழி வாங்க காத்திருந்த மகனின் தோட்டா உபயம் அது.
‘தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா? என்று பேரன் கேட்கும் இடம் தாத்தாவின் பதில்: ‘தெரியலியே அப்பா’. கதையில் கமலுடன் மணிரத்னமும் இணைந்து சிகரம் தொடும் இடம் இது.
சிறுவனாக, புரட்சியாளராக, பாசமிகுதந்தையாக, தன்னை உயிராக நேசிக்கும் மக்களின் நாயகனாக — ஒவ்வொரு பரிமாணத்திலும் அவரை வேலு நாயக்கராகவே உணர முடிகிறது. மகன் நிழல்கள் ரவி கொல்லப்பட்ட நிலையில் கதறும் இடத்திலும், மகள் கார்த்திகாவின் வெறுப்புக்கு ஆளாகும் இடத்தி லும் இரு வேறு உணர்வுகளை கொட்டிடும் அந்த ரியாக்ஷன் இதயம் வரை ஊடுருவிப் பாய்கிறது, இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும்.
வேலு நாயக்கரின் மனைவி கதாபாத்திரத்தில்
சரண்யா, அறிமுக நடிகை என்பதையும் தாண்டி மனதில் பதிகிறார். கமலின் மருமகனாக அவரை கைது செய்ய துடிக்கும் போலீஸ் அதிகாரியாக நாசர் அந்த கேரக்டரில் பளிச்சிடுகிறார்.
படத்தில் மறக்க முடியாத இன்னும் இருவர் ஜனகராஜ், டெல்லி கணேஷ்.
இளையராஜாவின் இசை இந்தப் படத்தின் ஜீவநாடி எனலாம் “நிலா அது வானத்து மேலே, நீ ஒரு காதல் சங்கீதம், நான் சிரித்தால் தீபாவளி போன்ற பாடல்கள் இன்றும் காதுகளில் தேன் மழை.
பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, தாராவி குடிசைப் பகுதிகளின் உண்மையான தோற்றத்தை படம் பிடித்து காட்டுகிறது.
முடிவாக ஒன்று. நாயகன் எப்போதுமே நாயகன் தான்.
