ஆரோமலே – திரை விமர்சனம்
ஆரோமலே என்பதற்கு ‘என் அன்பே’ என்று பொருள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு இளைஞனுக்கு வரும் அடுத்தடுத்த காதலை சொல்வது தான் படம். அவன் பள்ளி பருவத்தில் காதலிக்கிறான். அதில் தோல்வி. கல்லூரி பருவத்தில் காதலிக்கிறான். அதுவும் தோல்வி. படிப்பை முடித்து வேலையில் சேரும் போது அந்த அலுவலகத்தில் மேனேஜராக இருக்கும் பெண் மீது காதல் வசப்படுகிறான். இந்தக் காதலாவது கனியும் என்று பார்த்தால் அதுவும் சில காரணங்களால் ஊத்திக் கொள்கிறது. இந்த காதலுக்கு முடிவு தான் என்ன என்பதை திரை மொழியில் சுவாரசியமாகவே சொல்லி இருக்கிறார்கள்.
படத்தை இயக்கியிருப்பவர் சாரங் தியாகு. இவர் நடிகர் தியாகுவின் வாரிசு.
ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலை தேடுவதையே தனது வாழ்வின் ஒரு பகுதியாக வைத்திருக்கும் இளைஞன் கேரக்டரில் கிஷான் தாஸ் வருகிறார். ஒவ்வொரு பருவ காதல் தோல்வியின் போதும் சோகம் பொங்கும் அந்த முகம் அவரது தனித்துவ நடிப்பாகி விடுகிறது.
இவரது காதலிகளில் தனித்து தெரிகிறார் சிவாத்மிகா. (இவர் நடிகை ஜீவிதா- ராஜசேகர் தம்பதிகளின் வாரிசு) படத்தில் அதிகம் வருகிறவர் இவர் தான். அந்த கேரக்டருக்கு தனது நடிப்பால் அழகு சேர்த்திருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக வருகிற ராஜா ராணி பாண்டியன், அம்மா துளசி, வயதான காலத்தில் பெண்தேடும் வி.டி.வி.கணேஷ் தங்கள் பாத்திரப் படைப்பை நடிப்பால் சிறப்பாக்குகிறார்கள்
ஹீரோவின் நண்பனாக வரும் ஹர்ஷத்கான் காமெடியில் கலக்குகிறார். ஹீரோயின் தாத்தாவாக ஒரு சில சீன்களில் வந்தாலும் காத்தாடி ராமமூர்த்தி தனது அனுபவ நடிப்பால் அந்த அந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறார்.
ராஜேந்திரன் ஒளிப்பதிவும், சித்துவின் இசையும் காட்சிகளை ஜீவனோடு வைத்திருக்கின்றன.
முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு படத்தை ரசனையுடன் கரை சேர்த்ததில் இயக்குனர் சாரங் தியாகு தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நல்வரவாகி இருக்கிறார்.
