திரை விமர்சனம்

கிறிஸ்டினா கதிர்வேலன் — திரை விமர்சனம்

தலைப்பை பார்த்ததுமே இரு மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள். இவர்களுக்கு திருமணம் என்று வரும்போது அவரவர் மதங்கள் முட்டி மோதிக் கொள்ளும் என்று தோன்றுகிறது அல்லவா.
அதுதான் இல்லை. படத்தில் மதத்துக்கு எந்த ஒரு இடத்திலும் மதம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க
அம்சம் அதுவே படத்தை வேறு
கோணத்தில் அழகாக இட்டுச் சென்று விடுகிறது.

கதை இதுதான். கல்லூரி மாணவி கிறிஸ்டினாவை அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் கதிர்வேலன் விரும்புகிறான். ஆரம்பத்தில் இது விஷயத்தில்
அசிரத்தையாக இருந்த நாயகி, போகப் போக நாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகிறாள்.
இந்த சூழலில் இதே கல்லூரியின் இன்னொரு காதல் ஜோடிக்கு ரகசியமாய் பதிவு திருமணம் நடத்த சக மாணவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த கல்யாணத்துக்கு சாட்சியாக நாயகன் நாயகி இருவரும் தங்கள் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கிறார்கள்.
ஆனால் நாயகன் நாயகியின் அடையாள அட்டை புகைப்படம் அவர்களது திருமண சான்றிதழாக மாறி விடுகிறது.
இந்நிலையில் நாயகிக்கு வேறொரு வருடன் திருமணம் நிச்சயிக்கப்பட, இப்போது நடந்து முடிந்த ரிஜிஸ்டர் ஆபீஸ் குளறுபடியை சரி செய்தாக வேண்டும்.
இப்படியோர் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணரும் நாயகன் தன் மானசீக காதலிக்கு உதவ முன் வருகிறான். இப்போது காதலியின் கௌரவம் முக்கியம் என்று எண்ணும் அவன் அதற்காக முதலில் துறப்பது தன் காதலை.
ஒரு வழியாக போராடி திருமண சான்றிதழை ரத்து செய்த நிலையில் அடுத்து குறித்த தேதியில் நாயகி திருமணம் நடந்தாக வேண்டும்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தான் தன் எதிர்கால வாழ்க்கை சிக்கலை சீராக்கிய நாயகன் மீது நாயகிக்கு காதல் அரும்புகிறது. அதை தாமதமின்றி அந்த இரவிலேயே சொல்லிவிட நாயகனின் ஊருக்கு வருகிறாள்.
வரும் வழியில் நிகழும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் பரபரப்பும் பரிதவிப்பு மான கிளைமாக்சில் கொண்டு வந்து கதையை நிறுத்துகிறது.
நடந்து முடிந்த விபரீத சம்பவத்தால் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நாயகி உயிர் பிழைத்தாளா… காதல் ஜோடி தங்கள் காதலில் கரை சேர்ந்தார்களா என்பது விறு விறு
மீதிக்கதை.
கதிர்வேலனாக கெளசிக், கிறிஸ்டீனாவாக பிரதீபா இருவரையும் பொருத்தமான தேர்வாக கதையே எடுத்துக் கொண்டு விட்டது. அதனாலயே அந்த ஜோடி ரசிகர்களின் ரசனைக்குரிய ஜோடியாக மாறிவிடுகிறார்கள்.
திருமண சிக்கலில் இருந்து பிரதீபாவை காப்பாற்ற போராடும் காட்சிகளில் நாயகனும், வேறொ ருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் நாயகனை சந்திக்க நள்ளிரவு பயணம் மேற்கொள்ளும் இடத்தில் நாயகியும் மனதுக்குள் இடம் பிடித்து விடுகிறார்கள்.
கிறிஸ்தவ பாதிரியாராக வரும் அருள் டி.சங்கர் பாதராக ஒரு கோணத்திலும் நாயகியின் தாய் மாமாவாக இன்னொரு
கோணத்திலும் இரு வேறு நடிப்பிலும் டிஸ்டிங்க்ஷன் வாங்குகிறார். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

நாயகனின் நண்பராக வரும் சில்மிஷம் சிவா, ஆசிரியர் டி எஸ் ஆர். கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துடன் சுலபத்தில் நம்மை இணைத்துக் கொள்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமியின் கேமரா, கும்பகோணத்தின் அழகு மிகு தெருக்களை அழகாக காட்சிப் படுத்தி இருக்கிறது. எழுதி இயக்கி இருக்கிறார் அலெக்ஸ் பாண்டியன்.
ஒரு காதல் ஜோடியின் பதிவுத் திருமணத்துக்கு உதவிய இன்னொரு ஜோடி எத்தகைய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்ற கான்செப்ட் முழு படத்தையும் விறுவிறுப்பாகவே வைத்திருக்கிறது. அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே இயக்குனர் முத்திரை.