திரை விமர்சனம்

ஆண்பாவம் பொல்லாதது — திரை விமர்சனம்

இளம் தம்பதிகளின் இனிய இல்லற வாழ்க்கையில் ஈகோ புகுந்தால்…
நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இளம் தம்பதிகளின் மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் திடீரென்று இடைப்படும் ஈகோ அவர்களை விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. கோர்ட்டில் மனைவி விவாகரத்து கேட்க, கனவனோ சேர்ந்து வாழவே விருப்பம் என்கிறான்.
இறுதியில், இருவரில் யார் வெற்றி பெற்றது ? என்பதை தற்போதைய காலகட்ட தம்பதிகளின் வாழ்க்கைக்கு நெருக்கமாக அதே நேரம் கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
இளம் தம்பதிகளாக
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா முழு படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான ‘ஈகோ கெமிஸ்ட்ரி’ வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து படம் அசுர வேகத்துக்கு தாவுகிறது.
வருத்தமான வாழ்க்கையில் பொருத்தமான ஜோடியாக இவர்கள் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள் அனைத்தும், தற்போதைய காலக்கட்ட தம்பதிகள் கடந்து போகும் சம்பவங்கள் என்பதே படத்தை ரசிகர்களோடு நெருக்கமாக்கி விடுகிறது.
வழக்கறிஞராக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த் நகைச்சுவையோடு நின்றுவிடாமல் தன் குட்டி மகளிடம் வீடியோ காலில் பேசும்போது கலங்கவும் வைக்கிறார். ( ஹைய்யா சினிமாவுக்கு ஒரு நல்ல குணசித்திர நடிகரும் கிடைச்சி ட்டார்யா)
அவரின் மனைவியாக எதிர்க்கட்சி வழக்கறிஞராக ஷீலா கனகச்சிதம்.

விக்னேஷின் உதவியாளராக நடித்திருக்கும் ஜென்சன் காமெடி அரங்கை கலகலப்பாக்குகிறது. அவர் வாயை திறந்தாலே சிரிப்பு மழை தான்.

சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை, குறிப்பாக கோர்ட் காட்சிகளை பளிச்சென்று படமாக்கி ரசிக்க வைக்கிறது.
தம்பதிகளுக் கிடையிலான ஈகோ, அதனால் ஏற்படும் விளைவுகளை கலகலப்பான முறையில் காட்சிப்படுத்தி முதல் பாதியில் சிரிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் யோசிக்க வைக்கும் விதத்தில் திரைக்கதை அமைத்து ஒரு கலகலப்பு பாடமே நடத்தியிருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். இன்றைய சோசியல் மீடியாவின் அளப்பரிய பங்கே குடும்பங்களை பிரிப்பது தான் என்பதை காட்சி வாரியாக வெளிப்படுத்தி இள சுகளுக்கு பாடமும் நடத்தி இருக்கிறார் இயக்குனர்.
சிரிக்க, சிந்திக்க, கூடவே ரசிக்கவும்
வைக்கிற படைப்பு என்பதால் இந்தப் படம் வெற்றிப்பட வரிசையில் சுலபத்தில் இணைந்து கொள்கிறது.