திரை விமர்சனம்

காந்தாரா அத்தியாயம் 1 – திரை விமர்சனம்

அதிகார வர்க்கத்திற்கும் தெய்வபக்தியுடன் வாழும் ஆதி பழங்குடிகளுக்கும் நடக்கும் மோதலைப் பற்றி பேசிய காந்தாரா திரைப்படம் 2022-ல் வெளிவந்து பெரும் வெற்றியை அரவணைத்துக் கொண்டது. அதன் நீட்சியாகவே இந்தப் படம். அதாவது இரண்டாம் பாகத்தின் முன்பாகம் இது.

இதிலும் குலதெய்வம் இடம் பிடிக்கிறது. பக்கத்து தேசத்தில் உள்ள மன்னனின் பேராசை இருக்கிறது. தங்கள் பக்க நியாயத்துக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள். இது எல்லாவற்றுக்கு மேலாக மிரட்டும் கிளைமாக்ஸ் இருக்கிறது. தங்கள் காட்டில் விளையும் பொருட்களை சந்தையில் விற்று பணம் பார்க்கும் மக்களுக்கு பக்கத்து தேச அரசனால் தொல்லை ஏற்படுகிறது. இதனால் அந்த மக்களின் தலைவன் தொல்லை கொடுத்த படை வீரர்களை பெண்டெடுத்து அனுப்புகிறான்.

இதன்பிறகு மன்னர் சமாதான பேச்சு வார்த்தை நடத்துகிறார். சமாதானம் என்ற பெயரில் சதி நடப்பதை தெரிந்து கொண்ட காட்டுப்பகுதி மக்கள் தலைவன் ஆடும் ஆவேச ஆட்டமே மீதி படம்.

படத்தின் மிகப்பெரும் சிறப்பம்சம் வி எஃப் எக்ஸ் காட்சிகளில் வரும் புலி ,தேவாங்கு, மான் போன்ற மிருகங்கள் ஒருவேளை இவை ஒரிஜினல் மிருகங்களோ என்று எண்ண வைப்பது தான். நாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் ரிஷப் செட்டி தன் நடிப்பாலும் இயக்கத்தாலும் முழு படத்தையும் தூக்கி சுமந்து இருக்கிறார்.

நாயகி ருக்மணி வசந்த், அந்த இளவரசி பாத்திரத்தை தனது அழகான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார். மன்னராக வரும் ஜெயராம், சாணக்கியத்தனத்தில் கவர்கிறார். அவரது மகனாக வரும் குல்சன் தேவய்யா தனது வித்தியாசமான மேனரிசங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். பி. அஜினீஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நேர்த்தி . அரவிந்த் கே காஷ்யப் பின் கேமரா காடு மேடு பள்ளம், மலை, நீர்வீழ்ச்சி என எகிறிப் பாய்ந்தி ருக்கிறது.

நடிப்புடன் இயக்கமும் ரிஷப் ஷெட்டி. கதையை கையாண்டவர் அவருக்கு என்னவெல்லாம் தேவையோ அத்தனையையும் சிறப்புற கொடுத்திருக்கிறார். அதனாலேயே பான் இந்தியா பட வெற்றி வரிசையில் இந்த காந்தாராவும் இணைந்து கொள்கிறது.