பல்டி – திரை விமர்சனம்
செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் இந்த மூவரும் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் தாதாக்கள். இவர்களில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வட்டியும் அசலும் கட்ட முடியாதவர்களை அடி உதையோடு நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்கிறார் செல்வராகவன்.
பஞ்சமி என்ற கபடி அணியை வைத்துக் கொண்டு தங்கள் திறமையால் ஜொலிக்கும் ஷேன் நிகம் அணி செல்வ ராகவன் தரும் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அவரது பொற்றாமரை கபடி அணியில் சேர்ந்து விளையாடுகிறார்கள். அதில் சோடா பாபு எனப்படும் அல்போன்ஸ்
புத்திரனின் கபடி டீமை தோற்கடிக்கிறார்கள். இதன் பிறகு செல்வராகவனின் அடியாட்களாகவே மாறிப் போகிறார்கள். ஒரு கட்டத்தில் ஷேன் நிகமின் காதலி ப்ரீத்தி அஸ்ரானி யின் அண்ணன் குடும்பத்திற்கே செல்வ ராகவனால் பிரச்சனை வருகிறது. அதை தட்டிக் கேட்க செல்வராகவனின் அலுவலகத்துக்கே வருகிறார் ப்ரீத்தி. அங்கே அவர் அவமானப் படுத்தப்பட, பொங்கி எழுகிறார் ஷேன் நிகம்.
இந்த மோதலில் செல்வ ராகவனின் கன்னமும் பழுக்கிறது.
ஆத்திரமாகும் செல்வராகவன் ஷேன் நிகம் மட்டுமின்றி அவரது கபடி நண்பர்களையும் போட்டுத் தள்ள முடிவு செய்கிறார். இந்தப் போராட்டத்தில் கபடி நண்பர்கள் நிலை என்னவாகிறது? செல்வ ராகவன் என்னவாகிறார் என்பது அதிரடி கதைக் களம்.
தமிழகம், கேரளா பார்டரில் இருக்கும் பாலக்காடு அருகே கதை நடக்கிறது. கபடி பின்னால் இருக்கும் பாலிடிக்ஸ், சண்டையை சொல்லப்போகிறார்கள் என்று பார்த்தால் அப்படியே ட்ராக் மாறி விடுகிறது கதை. வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு , வட்டி கட்டாதவர்களை நிர்வாணமாக்கி மிரட்டும் செல்வராகவன் மீது அவர் கை வைக்க, அவரை கொல்ல துரத்துகிறது செல்வராகவன் டீம். இடையில் இன்னொரு தாதாவான பூர்ணிமாவும் பாலிடிக்ஸ் செய்கிறார். அப்போது ஷேன்
நிகம்மின் உயிர் நண்பரான சாந்தனு என்ன செய்தார் என்பதை ஆக்ஷன் பேக்கிரவுண்ட்டில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம் ஸ்டடைலான கபடி வீரராக களம் இறங்கும் ஷேன் நிகம் கேரக்டர் ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்ஷனிலும் தூள் பர த்துகிறார். அவரது காதலியாக வரும் ப்ரீத்தி அஸ்ரானி கண்களால் காதல் பேசும் இடம் தனியழகு. கொள்ளை வட்டி செல்வ ராகவனிடம் கோபத்தில் பொங்கி எழும் காட்சி அஸ்ரானியை நடிப்பு ராணியாக்கி விடுகிறது.
ஷேனின் நண்பராக வரும் சாந்தனுவும் அவருடன் சேர்ந்து பைட் சீன், கபடி சீன்களில் கலக்கியிருக்கிறார். கிளைமாக்சில் அவர் இன்னொரு முகமாக மாறுவது, அட, நம்ம சாந்தனுவா இவர்?’ என கேட்க வைக்கிறது.
வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டும் தாதாவாக வரும் செல்வராகவன் அமைதியாக பேசி, அதிரடியாக மிரட்டுகிறார். கிளைமாக்ஸில் அவர் ஆடும் ரத்த தாண்டவம் மிரட்டல். இன்னொரு வில்லனாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் மனதில் நிற்கிறார். சுருட்டு பிடிக்கும் வில்லி பூர்ணிமா ஏதோ செய்யப்போகிறார் என நினைத்தால் சிகரெட் மட்டும் தான் காலி ஆகிக்கொண்டே இருக்கிறது. சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் இனிமை. அதிலும் ஜாலக்காரி மனதை மயக்கும் மாயக்காரி. பின்னணி இசை சேர்த்திருப்பது காட்சிகளுக்கு கூடுதல் கனம்.
ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக கபடி போட்டி மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார்.
கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில அப்பாவி இளைஞர்களின் சீரழியும் வாழ்க்கை என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்திருக்கும் திரைக்கதை, மற்றும் காட்சிகள் பார்வையாளர்களை படத்தோடு நெருக்கமாக்கி விடுகிறது.
