அந்த 7 நாட்கள் – திரை விமர்சனம்
சூரியகிரகண ஆராய்ச்சியில் ஈடுபடும் கல்லூரி மாணவருக்கு அதிசயசக்தி கிடைக்கிறது. அதாவது ஒருவரை உற்றுப் பார்த்த மாத்திரத்தில் அவரது மரண தேதி தெரிகிறது.அது அப்படியே பலிக்கவும் செய்கிறது. இந்நிலையில் அவரது காதலியை உற்று நோக்கிய போது இன்னும் 7நாட்களில் அவள் மரணமடைவாள் என்பது தெரியவர…
காதலியைக் காப்பாற்றப் போராடுகிறார். அவருக்குள் இருந்த அந்த அதிசய சக்தி அதுவரை பலித்து வந்த நிலையில், உயிருக்கு உயிரான தன் காதலியும் மரணத்தை தழுவி விடுவாளோ என்ற பதட்டம் நாயகனை ஆக்கிரமிக்க, காதலியை காப்பாற்ற அந்த ஏழு நாட்களும் விடாப்பிடியாக போராடுகிறார். காதலியை காப்பாற்ற முடிந்ததா என்பது உணர்வு பூர்வமான கிளைமாக்ஸ்.
அஜிதேஜ் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பில் எந்த இடத்திலும் அறிமுக நடிகர் இரண்டு அடையாளமே இல்லாத அளவுக்கு இயல்பாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். காதலியைக் காப்பாற்ற மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நடிப்பால் மனதை ஆக்கிரமிக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீஸ்வேதாவுக்கும் இது அறிமுக படம் தான். ஆனால் அந்த சுவடே இல்லாமல் இவரும் இயல்பான நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ்சில் நோயின் தீவிரத்தில் எந்த நேரமும் மரணம் நிச்சயம் என்ற நிலையில் இவரது நடிப்பும் உடல் மொழியும் விருதுக்குரியது. அமைச்சராக கே.பாக்யராஜ், நாயகனின் அப்பாவாக நமோ நாராயணன், வழக்கறிஞராக சுபாஷினி கண்ணன், கௌரவத் தோற்றத்தில் தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்க, பின்னணி இசை மூலம் இந்த
கனமான கதைக்கு மேலும் கனம் சேர்த்து இருக்கிறார்.
கோபிநாத் துரையின் ஒளிப்பதிவு காட்சிகளை நெஞ்சுக்கு நெருக்கமாக கொண்டு வந்து விடுகிறது. எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சுந்தர். நாட்டில் இன்று அதிகமாகப் பேசப்படும் தெருநாய்க்கடி சிக்கல் மற்றும் அதன் விளைவுகளை காட்சிப்பதிவில் உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். கடைசி 20 நிமிடம் ரசிகர்களின் திக் திக் நேரம்.
