திரை விமர்சனம்

சரீரம் – திரை விமர்சனம்

கல்லூரியில் படிக்கும் தர்ஷன் பிரியனும், சர்மி விஜயலட்சுமியும் காதலர்கள். நாயகியின் குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதன் பிறகும் காதல் தொடரவே நாயகியின் குடும்பம் நாயகனை கொலை செய்யவும் முயற்சிக்கிறது. இந்த விஷயத்தில் சொத்துக்காக நாயகியை அடைய விரும்பும் அவள் தாய் மாமன் நாயகனை கொல்ல கொலை வெறியுடன் அலைகிறான்.
இந்தக் கொலை வெறிக்கும்பலிடம் இருந்து தப்ப காதல் ஜோடி யாரும் யோசித்துக் கூட பார்க்க முடியாத ஒரு விபரீத காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அது என்ன ? அதன் மூலம் அவர்களது காதல் வாழ்க்கை நீடித்ததா என்பதை வித்தியாசமான முற்றிலும் எதிர்பாராத திரைக்களத்தில் தந்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் பிரியன், நடனம், நடிப்பு, ஆக்‌ஷன் என எல்லா ஏரியாவிலும் அடித்து ஆடுகிறார். காதலுக்காகவும், காதலிக்காவும் எதையும் செய்ய துணிந்தவர், தனது சரீரத்தையே மாற்றிக் கொள்ள சம்மதித்து, அதன் மூலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வலிகள் ஆகியவற்றை தனது தனது நடிப்பில் சிறப்பாகவே பிரதிபலித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சர்மி விஜயலட்சுமி, அறிமுக நடிகை என்ற சுவடே இல்லாமல் தனது கேரக்டரில் அழகாக வலம் வருகிறார். காதலுக்காக தன்னை ஆணாக உருமாற்றிக் கொள்ளும் ஆபரேஷனுக்கு சம்மதிக்கும் இடம் தொடங்கி, தன் தந்தைக்கு தன்னை யார் என்று அடையாளம் தெரியாத ஹோட்டல் சம்பவம் வரை அழுத்தமான கதாபாத்திரத்தில் மனசை கனமாக்கி விடுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஜெ.மனோஜ், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ‘புதுப்பேட்டை’ சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜி.வி.பெருமாள் மலைச்சாமி கதையை தாங்கும் கேரக்டராகவே மாறித் தெரிகிறார்கள். டாக்டராக வரும்
ஷகிலா அந்த குணச்சித்திர பாத்திரத்தில் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார். படத்தின் பிரதான அம்சமாக திருநங்கைகளின் பங்களிப்பும் இணைந்து கொள்கிறது.
இசையமைப்பாளர் பாரதிராஜா இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை இளமை. ஒளிப்பதிவாளர்கள் கே.டொர்னாலா பாஸ்கர் மற்றும் பரணி குமார் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழு படத்தையும் அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் ஜி.வி.பெருமாள், காதல் கதையை இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

எதிர்ப்புகளை சமாளித்து, காதலில் ஜெயிக்க பாலினத்தையே மாற்றிக்கொள்ள காதலர்கள் முடிவுக்கு வரும் இடத்தில் ‘அம்மாடி இதுதான் காதலா’ என்று விழிகளை வியக்க வைக்கிறார். காதலர்களின் இந்த முயற்சி இயற்கைக்கு எதிரானது மட்டும் இன்றி விபரீதமானதும் கூட என்பதை நீதிபதி கதாபாத்திரம் மூலம் சொல்லி, படத்தை முடித்திருக்கும் இடத்தில் இயக்குனரின் புத்திசாலித்தனமான திரைக்கதைக்கு கைதட்ட தோன்றுகிறது.

மொத்தத்தில், காதலுக்கு சமர்ப்பணம் இந்த  ‘சரீரம்’.