திரை விமர்சனம்

ரைட் – திரை விமர்சனம்

காவல் நிலையத்தை மையமாக வைத்து ஒரு திரில்லர் படம் தந்திருக்கிறார்கள்.
கோவளம் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக இருப்பவர் நட்டி. பிரதமர் பாதுகாப்பிற்காக அவர் சென்ற நிலையில் அவர் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார்.
அவை உண்மை என்று நிரூபிப்பது போல் லாக்கப்பில் இருந்து நைசாக வெளியேற முயன்ற கைதி ஒருவர் குண்டு வெடித்து சிதறிப் போகிறார்
அந்த நேரத்தில், தன் மகனை காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.

பிரதமர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற விபரீதம் வெளியே தெரிய வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரிதாகும். அதனால் இந்த பிரச்சினையை அடக்கி வாசிக்க உத்தரவிடுகிறார் கமிஷனர். இந்த நிலையில் மர்ம நபரின் கட்டுப்பாட்டில் இருந்து காவல்துறை மீட்கப்பட்டதா? அந்த மர்ம மனிதர் பிடிபட்டாரா, இல்லையா? இதில் அவரது நோக்கம் என்ன என்பதை கனமான ஒரு
நெகிழ்வு கதையுடன் சேர்த்து முடிச்சு போட்டு இருக்கிற திரைக்கதை மொத்த படத்தையும் கடைசி வரை விறுவிறுப்புடன் வைத்திருக்கிறது.

காவல்துறை ஆய்வாளராக வரும் நட்டி தான் கதையின் நாயகன். அவருடைய கதாபாத்திரமும் அதற்கான நடிப்பும் சிறப்பு. கிளைமாக்ஸ்சில் மனசை கலங்கடிக்கிற நடிப்பு இவருடையது.

முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அருண் பாண்டியன், தனது நடிப்பு சிறப்பால் அந்த கேரக்டரை தாங்கி பிடிக்கிறார். மகனை காணவில்லை என்ற தனது புகாரை அலட்சியமாக கையாளும் போலீசாரிடம் ஒரு கட்டத்தில் இவர் எகிறிப் பாயும் ஒரு காட்சி போதும் இவர் நடிப்பை சொல்ல.
காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி தனது கேரக்டரின் கனமறிந்து அதை சிறப்பாக செய்திருக்கிறார்.

காவலராக நடித்திருக்கும் மூணாறு ரவிக்கு கனமான வேடம். உயிர் பயத்தை கண்களிலே காட்டும் இடங்கள் அவருக்குள் இருந்த சிறந்த நடிகனை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. நீதிபதியாக வினோதினி, இளம் காதல் ஜோடி ஆதித்யா சிவகுமார்-யுவினா, கைதியாக தங்கதுரை, முன்னாள் போலீஸ் அதிகாரியாக முத்துராமன் பொருத்தமான பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள். குணா பாலசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை இந்த திரில்லர் கதையை உயர்த்திப் பிடிக்கிறது. ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷுன் கேமரா படத்தின் இன்னொரு நாயகனாக வலம் வந்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கிறார் சுப்பிரமணியன் ரமேஷ்குமார். காவல் நிலையத்தில் நிகழும் ஒரு விபரீத சம்பவ பின்னணியில் இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பி இருக்கிறார். அந்த வகையில் படத்துக்கு டபுள் ரைட் கொடுக்கலாம்.