திரை விமர்சனம்

இந்திரா – திரை விமர்சனம்

குடித்து விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக போலீஸ் அதிகாரி இந்திரகுமார் பணியிடை நீக்கம் செய்யப்படு கிறார்.அதனால் மன அழுத்தம் அதிகமாகி மேலும் குடிக்கிறார். இதனால் காதல் மனைவி கயலின் வெறுப்புக்கும் ஆளாகிறார்.
ஒரு கட்டத்தில்
குடியே அவரது கண் பார்வை போகவும் காரணம் ஆகிறது. இதன் பிறகு மனைவியிடம் மன மாற்றம். கண்ணாக இருந்து கணவனை தாங்குகிறார்.
இந்த நிலையில் மனைவி கயல் ஒரு நாள் பூட்டிய வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்படுகிறார்.
வேலை போய் கண் பார்வையும் போய் தனது காதல் மனைவியும் கொலை செய்யப்பட்ட நிலையில், தாங்க முடியாத மன அழுத்தத்தில் தவிக்கிறார் இந்திரகுமார்.
தன் மனைவியைக் கொன்றவனை கண்டுபிடித்து பழி வாங்கத் துடிக்கிறார்.
பூட்டிய வீட்டுக்குள் இந்திர குமாரின் மனைவி கொலை என்றதும் போலீசின் சந்தேகப் பார்வை இந்திரகுமார் மீது திரும்புகிறது.
ஆனால் இந்திரகுமாரோ தன் மனைவியை கொன்றவனை பழிவாங்க தன் போலீஸ் நண்பன் ராஜ்குமாருடன் சேர்ந்து தேடித் திரிகிறான்.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன் தொடர்ந்து கொலைகள் செய்து வருகிறான் .அவனை சுற்றி வளைக்கும் போலீஸ், பூட்டிய வீட்டுக்குள் கொலை யுண்ட கயல் பற்றி விசாரிக்கிறது. அவனோ, ‘நான் இதுவரை 28 கொலைகள் செய்திருக்கிறேன். அந்த பட்டியலில் இந்தப் பெண் இல்லை’ என்கிறான்.
அப்படியானால் கயலை கொன்ற கொலையாளி யார்? அவள் கணவன் இந்திர குமாரின் தேடுதல் வேட்டையில் அவன் சிக்கினானா? என்பது விறுவிறுப்போடு இணைந்த பரபரப்பு திரைக்கதை.

படத்தில் இந்திரகுமார் என்ற இந்திராவாக வசந்த் ரவி நடித்துள்ளார். மிதமிஞ்சிய குடி போதையால் வேலை போன மன அழுத்தத்தை நடிப்பில் அச்சு அசலாக பிரதிபலிக்கிறார். பார்வை இழந்த நிலையில் மனைவியின் அன்புள்ள அக்கறையில் நெகிழும் இடங்களிலும் அளவான, அழகான நடிப்பு. மனைவியின் கொலைக்கு பிறகு கொலையாளியை தேடி பயணப்படும் இடத்தில் ஆவேசப் புலியாக கண்களில் நிற்கிறார்.

நாயகி கயலாக மெஹ்ரீன் பிர்சாடா நடித்துள்ளார். குடிகார கணவனிடம் பாராமுகமாக இருப்பது, ஒரு கட்டத்தில் பாச முகமாக மாறுவது என இரு வேறு நடிப்பிலும் அந்த கேரக்டரில் சிறப்புற வெளிப்படுகிறார். கண்பார்வை இழந்த கணவனை அக்கறையாகப் பார்த்துக் கொள்ளும் இடத்தில் அன்பும் அக்கறையுமான நடிப்பில் நெகிழ வைக்கிறார்.
வேலைக்காரப் பெண் மதியாக அனிகா சுரேந்தர் நடித்துள்ளார். பாந்தமான அந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு என்பதை நடிப்பில் நிரூபிக்கிறார். அவரது காதலனாக வரும் நாகேந்திரா காதலியின் மரணத்தை நேரில் பார்த்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அந்த கையறு நிலையை நடிப்பில் அழகாக கொண்டு வந்து விடுகிறார்.
படத்தில்
சைக்கோ கொலைகாரனாக வரும் சுனில், போலீஸிடம் அசால்ட்டாக 28
கொலைகள் செய்வதாக கூறும் இடத்தில் நமக்கே கதி கலங்கிப் போகிறது. மிடுக்கான காவல்துறை அதிகாரியாக கல்யாண் மாஸ்டர், நண்பனுக்கு உதவும் போலீசாக ராஜ்குமார் ரசிக்க வைக்கிறார்கள்.
படம் சீரியல் கொலைகளைச் சுற்றி நகராமல், படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு இந்திரகுமார் என்ற இந்திராவைச் சுற்றியே நடக்கிறது. அதற்கேற் ப காட்சிகள் அமைத்து கச்சிதமாக இயக்கியிருக்கிறார் சபரீஷ் நந்தா.

பிரபு ராகவின் ஒளிப்பதிவும்,
அஜ்மல் தஹ்சீனின் பின்னணி இசையும் இந்த திரில்லர் கதையின் இன்ன
பிற பக்க பலம்.
இந்த இந்திரா, சஸ்பென்ஸ் சாம்ராட்.