ஐடென்டிட்டி – திரை விமர்சனம்
ஒரு கொலையில் தொடங்கி முடிவு வரை விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதை இந்த படத்தின் முதல் பலம். ஜவுளிக் கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து பணம் பார்க்கும் ஒருவன் கொல்லப்படுகிறான். அப்படியே உடம்பை எரித்தும் விடுகிறான்
இந்தக் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சி திரிஷா. அவர் மூலம் கொலையாளியை கண்டு பிடிக்க முடிவு செய்யும் போலீஸ் அதிகாரி வினய், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து அப்படியே வரையும் ஆற்றல் பெற்ற டொமினோ தாமசின் உதவியை நாடுகிறார். திரிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து முகத்தோற்றத்தை வரையும் டொவினோ தாமஸ் வரைந்திருப்பது அவர் படத்தையே.
இந்தக் கொலையை நேரில் பார்த்த சில நாட்களுக்கு முன்பு தான் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு காப்பாற்றப்படுகிறார் திரிஷா. இதன் பிறகு அவரது ஊகித்தறியும் ஆற்றல் சற்று தாமதப்படுகிறது. இந்த நிலையில் தான் அந்தக் கொலையை பார்க்கிறார் திரிஷா.
இப்போது கொலையாளி டொவினா தாமஸ் தான் என்பதை நம்பும் போலீஸ் அதிகாரி வினய் அவரை கைது செய்ய முனைகிறார். அதே நேரம் பெரியவர் ஒருவர் தானாக முன்வந்து நான்தான் அந்த கொலையாளி என்கிறார். உண்மையில் கொலையாளி யார்? இந்தக் கொலைக்கும் டொவினோ தாமசுக்கும் என்ன சம்பந்தம்? என்பது சுற்றி வளைத்து பின்னப்பட்ட சுவாரசிய திரைக்கதை. இதை ஆக்சன் ஜானரில் அதிரடி பின்னாடியில் சொன்ன விதத்தில் படம் ரசிகனுக்கு பரபரப்பு தீனி போட்டு விடுகிறது.
அதீத திறன் படைத்த இளைஞர் ஹரன் சங்கராக டொமினோ தாமஸ் ஆர்ப்பாட்டம் இல்லாத அதேநேரம் அழுத்தமான நடிப்பில் மனதில் பதிகிறார். கொலைக்கு சாட்சியாக வரும் திரிஷா தனக்குள்ளான குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் இடங்களில் அம்சமான நடிப்பு.
போலீஸ் அதிகாரியாக அறிமுகம் ஆகும் வினய். போகப் போக நேரும் தனது கேரக்டர் மாற்றங்களில் நடிப்பில் புது அத்தியாயம் படைக்கிறார். படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மந்த்ரா பேடி. அதிரடியாக சண்டையும் போடுகிறார்.
ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜின் கேமரா நடுவானில் பறக்கும் விமானத்தில் நடக்கும் சண்டைக் காட்சியில் மாயாஜாலம் நிகழ்த்துகிறது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையில் பசை அதிகம்.
ஒரு கொலை அதை செய்தவர் யார் என்பதை தொடக்கத்திலேயே காட்டி விட்டு அதன் பிறகு வரும் எதிர்பாராத திருப்பங்களும் கதையோடு நம்மை இணைத்துக் கொள்ளும் வித்தையை அகில் பால்- அனஷ்கான் இயக்கம் சர்வ சாதாரணமாக செய்து விடுகிறது.
சஸ்பென்ஸ் பிரியர் களுக்கு இது சர்க்கரை பொங்கல்.