மழையில் நனைகிறேன் -திரை விமர்சனம்
பட்டப்படிப்பை முடிக்காமல் நண்பர்களுடன் வெட்டியாக ஊர் சுற்றி வரும் பணக்கார இளைஞன் அன்சன் பால்.அமெரிக்கா சென்று மேற்படிப்பை முடிக்க அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபடும் நாயகி பிரபா ஜான்.ஒரு மழை நேர பொழுதில் நாயகியை சந்திக்கும் நாயகனுக்கு பார்த்ததுமே காதல் பற்றிக்கொள்ள, அவள் கண்ணில் படும் போதெல்லாம் காதலை சொல்ல முற்படுகிறான், அதற்காக அவளை விடாமல் துரத்துகிறான்.
ஒரு கட்டத்தில் நாயகனின் அணுகுமுறை பிடிக்காத நாயகி எதற்காக இந்த தொடரல் என்று விசாரிக்கிறாள்.நாயகன் காதலை சொல்ல, நாயகியோ தன் அமெரிக்க கனவை சொல்லி என்னை மறந்து விடு என்கிறாள். ஆனால் நாயகனோ, நீ என் காதலை ஏற்றுக் கொள்ளும் வரை உன்னை தொடர்வது நிற்காது என்று அடம் பிடிக்க…ஒரு கட்டத்தில் நாயகியும் காதலுக்கு ஓகே சொல்ல முடிவு செய்கிறாள். அதற்காக அவனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு பைக்கில் பயணம் ஆகிறாள். அந்த பைக் பெரும் விபத்துக்கு உள்ளாக…இருவரும் உயிர் பிழை த்தார்களா? அவர்கள் காதல் என்னவாகிறது என்பது கதை.
நாயகனாக அன்சன் பால் அந்த பணக்கார காதலன் கேரக்டரில் தனது நடிப்பு முத்திரையை சுலபத்தில் பதித்து விடுகிறார். நீ என்னை விரும்பாவிட்டால் நீ லவ் சொல்லும் வரை காத்திருப்பேன் என்று சொல்லும் இடத்தில் அந்த காதலின் வலு நாயகனின் நடிப்பிலும் தெரிகிறது. பணக்கார இளைஞனுக்கு உரிய அந்த மிடுக்கிலும், காதல் வாழ்க்கைக்காக அவர் மேற்கொள்ளும் நடுத்தர வாழ்க்கையிலும் நடிப்பில் ஸ்கோர் செய்து விடுகிறார்.
நாயகியாக வரும் ரெபா ஜான் அந்த கேரக்டரில் 100% பொருந்தி போகிறார். ஆரம்பத்தில் ஒரு தலைக் காதலை உதாசீனம் செய்யும் இடத்திலும், பின் காதல் வசப்படும் இடத்திலும் நடிப்பில் இரு வேறு முக பாவங்கள் அற்புதக் கலவையாக முகத்தில் தாண்டவம் ஆடுகின்றன. ஆஸ்பத்திரியில் கோமாவில் இருந்து விழித்ததும் அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் நடிப்பில் தேர்ச்சியான நடிகையை கண்முன் நிறுத்துகிறது.
நாயகனின் அப்பாவாக மேத்யூஸ் வர்கீஸ், அம்மாவாக அனுபமா குமார், நாயகனின் அப்பாவாக சங்கர் குரு இயக்குனர் ராஜா, நாயகனின் நண்பனாக கிஷோர் ராஜ்குமார் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் பரம சுகம். ஜெ. கல்யாணின் கேமரா காட்சிகளை நமக்கு நெருக்கமாக்கி விடுகிறது. குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சியின் வீரியத்துக்கு கேமராவே சாட்சி.
எழுதி இயக்கி இருக்கும் டி. சுரேஷ்குமார் ஒரு மென்மையான காதலை அதைவிட மென்மையாக கையாண்டிருக்கிறார். காதலின் பார்வையிலான அந்த காதல் தம்பதிகளின் வாழ்க்கை நிச்சயம் நெஞ்சுக்குள் சுகராகம். நாயகி தன் நெஞ்சுக்குள் பொத்தி வைத்திருந்த காதலை நாயகனிடம் சொல்லும் அந்த கிளைமாக்ஸ் கனமானது. கண்களை நனைப்பது.
மழையில் நனைந்த கண்ணீர் கூட இங்கே தனி சுகம்.
காதல் மழை.